Suriya 44: அந்தமானில் அனல் பறக்கும் சண்டைக் காட்சி; ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் அறிவிப்பு எப்போது?

சூர்யாவின் பிறந்த நாள் இம்மாதம் வருகிறது. இதனையொட்டி அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கன்றன. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 44’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவிருக்கிறது. தவிர விக்ரமிற்கு ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ வெளியானதை போன்று சூர்யாவிற்கு ‘கங்குவா’ மேக்கிங் வீடியோவும் வெளிவரக் காத்திருக்கிறது.

சூர்யா – கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஷூட்டிங், அந்தமானில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூர்யாவின் ஜோடியாக பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் எனப் பலரும் இதில் நடித்து வருகின்றனர். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கு முன்னமே சூர்யாவுக்கென இந்த கதையை ரெடி செய்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

பூஜா ஹெக்டே

அந்தமானில் சூர்யா – பூஜா ஹெக்டே காம்பினேஷனில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. தவிர, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ (Kecha Khamphakdee) சூர்யாவின் உழைப்பைப் பார்த்து ஆச்சரியமானதுடன், ‘கங்குவா’வை காணவும் ஆவலாக இருப்பதாக பிரமிப்புடன் சொல்லியிருக்கிறார். ஏகப்பட்ட ஃபைட்டர்களுடன் சூர்யா மோதும் காட்சிகளில் அனல் பறக்கும் என்கிறார்கள். இந்த ஸ்டன்ட் மாஸ்டர் இதற்கு முன் முருகதாஸின் ‘துப்பாக்கி’, அட்லியின் ‘ஜவான்’ ஆகிய படங்களில் பணிபுரிந்தவர்.

‘கங்குவா’ டீம்

அந்தமானில் முதற்கட்ட ஷெட்யூலாக 30 நாள்கள் எனத் திட்டமிட்டனர். அதன்படி அங்கே முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைகிறது. சூர்யாவின் போர்ஷன் 5-ம் தேதியோடு முடிவடைகிறது. மற்றவர்களின் போர்ஷன் இன்னும் சில நாள்கள் நீடிக்கிறது. இந்த ஷெட்யூலோடு சென்னை திரும்பும் டீம், சில நாள்கள் பிரேக்கிற்கு பின் ஊட்டி கிளம்புகிறது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள ‘சூர்யா 44’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.