கரூர்: “தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த தேர்தல் முடிவு செய்திருக்கிறது” என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கரூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாஜக ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியது: “தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி வாரியாக ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் முக்கியமான தலைவர்களுக்கு ஆளுக்கு இரு தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றியவர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கியமானவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் இடமாகவும், தேர்தலில் ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கப்பட்ட வாக்குகள் எந்த இடத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் மேற்கொள்வது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு இடங்களில் மக்கள் பாஜகவுக்கு நல்ல ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்கே பாஜக என்று கேட்டவர்களுக்கு விடையளிக்கும் விதத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல வாக்குகள் பெற்றுள்ளனர். கட்சியின் கட்டமைப்பை அளிக்கும் வகையில் நல்ல வாக்குகள் பெற்று ஒவ்வொரு பகுதியிலும் நல்ல தலைவர்கள் அறிமுகமாகி இந்த தேர்தலை பாஜக நன்றாக எதிர்க்கொண்டது.
இது ஒரு நல்ல தேர்தல் 10 ஆண்டுகள் மக்களுக்கு செய்த சாதனைகளை சொல்ல வாய்ப்பு. வாக்குகளை பயன்படுத்தி அடுத்த கட்டமாக அடுத்த தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு இந்த தேர்தல் உதவுகிறது. பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். எம்.பி தேர்தலில் அதிமுகவை தாண்டி அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். நோட்டா என்பதெல்லாம் கடந்த காலம். தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த தேர்தல் முடிவு செய்திருக்கிறது.
அமைச்சர்கள் கூட மதுவை தமிழகத்தில் சர்வசாதாரண விஷயம் போல பேசி வருகின்றனர். பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியாது என்பதை ஒத்துக்கொண்டதன் மூலம் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளனர்.
மதுகடைகளை மூடினால் கள்ளச் சாராயம் வந்துவிடும் என்றவர்கள் வீதிக்கு, வீதி மதுக்கடைகளை திறந்து வைத்தும் கள்ளச் சாராயத்தை தடுக்க முடியவில்லை. இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாரென பார்த்தால் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். சமத்துவம் பேசுகின்ற அரசில்தான் மாணவர்கள் ஜாதிரீதியாக மோதிக்கொள்வது நடக்கிறது” என்றார்.
மேலும், “அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது” குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “யார் மீது வழக்கு தொடர்ந்தாலும் அதை அவர்கள் சட்டரீதியாக சந்தித்துதான் ஆகவேண்டும்” என்றார்.