வேலூர் அருகேயுள்ள அரியூர் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் ராஜா என்கிற எம்.எல்.ஏ ராஜா. சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ கிடையாது. ரௌடிகள் மன்றத்தில் கெத்துக்காக தனக்குத் தானே சூட்டிக்கொண்ட பெயர்தான் ` எம்.எல்.ஏ’ என்ற வார்த்தை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக… வேலூர் புறநகர்ப் பகுதியில் பிரபல ரௌடியாக வலம் வந்து கொண்டிருந்த ராஜாமீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் என ஏகப்பட்ட குற்ற வழக்குகள் குவிந்துக்கிடக்கின்றன.
கடந்த 2020-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி இரவு, அரியூர் பகுதியில் சிறை வார்டன் உள்ளிட்ட 3 பேரை ஒரே நேரத்தில் துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்றதும், ராஜா தலைமையிலான கூலிப்படையினர்தான்.
இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு வேலூரையே பீதிக்குள்ளாக்கிய பா.ஜ.க பிரமுகர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கிலும் கைதுசெய்யப்பட்ட கூலிப்படையினரில் அரியூர் ராஜாவும் ஒருவர். ரௌடிசத்தின் தொடக்கமும் அங்கிருந்துதான் ஆரம்பமாகியிருக்கிறது. ஆனாலும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2020-ம் ஆண்டில் 3 உயிர்களைப் பறித்த பிறகே அரியூர் ராஜாவின் க்ரைம் கிராப் கிடுகிடுவென உயர்ந்தது.
தொடர்ச்சியான குற்றச் சம்பவங்களால், பலமுறை `குண்டர்’ தடுப்புக் காவலிலும் சிறைப்படுத்தப்பட்டார் ராஜா. ஆனாலும், ராஜாவின் கொட்டம் அடங்கவில்லை. ஜாமீனில் வெளியே வந்து தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் நேற்று இரவு அரியூர் பேருந்து நிறுத்தப் பகுதியிலேயே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் ரௌடி ராஜா.
பட்டாக் கத்திகள் அவரது முகத்தை அடையாளம் காணமுடியாத அளவுக்கு பதம் பார்த்திருக்கின்றன. காரில் வந்த 4 இளைஞர்கள் சுற்றுப்போட்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது தெரியவந்திருக்கிறது. காரில் தப்பிய கொலையாளிகளை வல்லம் சுங்கச்சாவடியில் போலீஸார் மடக்கிப் பிடித்திருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலையை நிகழ்த்திய இளைஞர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும், கடந்த சில நாள்களாக அந்த இளைஞர்களை ரௌடி ராஜா மிரட்டி வந்ததும் தெரியவந்திருக்கிறது. ராஜா முந்துவதற்குள்ளாக அவரது கதையை முடித்துவிட வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் முந்திக்கொண்டிருப்பதாகவும், விசாரணையில் தெரியவந்திருக்கிறது.