அமர்நாத் யாத்திரை: செயலிழந்த பேருந்தின் பிரேக் – 10 பேர் காயம்

ஜம்மு: காஷ்மீரின் அமர்நாத் குகை கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அமர்நாத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் பிரேக் செயலிழந்துள்ளது. அந்த பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர். சிலர் ஓடும் பேருந்தில் இருந்து வெளியேறிய காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலை 44-ல் நடைபெற்றுள்ளது. 40 பயணிகளுடன் பேருந்து அமர்நாத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தின் பிரேக் செயலிழந்த காரணத்தால் ஓட்டுநரால் அதனை நிறுத்த முடியவில்லை. நச்லானா என்ற இடத்தில் இது நடந்துள்ளது.

இதை அறிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார் இணைந்து துரிதமாக செயல்பட்டு பேருந்து சக்கரத்தில் கற்களை வைத்துள்ளனர். இதனால் அதன் வேகம் குறைந்துள்ளது. பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. பெரும் அசம்பாவிதம் இதன் மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.



இந்த சூழலில் அச்சத்தின் காரணமாக பேருந்தில் பயணித்த பயணிகளில் சிலர் ஓடும் போதே அதிலிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களில் மூன்று பெண்கள், ஒரு குழந்தை உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் அருகியில் உள்ள மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அமர்நாத் யாத்திரை: ஜூன் 29-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பால்டால் மற்றும் நுன்வான் அடிவார முகாம்களில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ மற்றும் உணவு சார்ந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.