புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி, கடந்த 27-ம் தேதி சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மறுநாள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், அத்வானிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்வானியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது சீராக இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்வானி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
1980-ல் பாஜக தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் எல்.கே.அத்வானி. 1990-களில் பாஜகவை எழுச்சி பெறச் செய்ததில் அத்வானி முக்கியப் பங்காற்றியவர். பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில் துணை பிரதமராக பதவி வகித்த எல்.கே.அத்வானிக்கு கடந்த பிப்ரவரியில் நாட்டின் மிகஉயரிய விருதான பாரத ரத்னாவிருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.