• ஆர்ஜென்டீனா, , ஈக்வடார் ( Ecuador) மற்றும் கானாவில், இருதரப்புக் கடன்களுக்காக அன்றி, வர்த்தகக் கடன்களுக்கே ( Commercial Loans) 25% கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
• ஜப்பானிய திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக அடுத்த வாரம் JICA உடன் கலந்துரையாடல் நடத்தப்படும் – துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சட்ட ரீதியில் கூட ஸ்ரீலங்கன் எயாலைன்ஸின் 49% மட்டுமே வேறொரு நிறுவனத்திற்கு வழங்க முடியும் என்றும், அதற்காக இதுவரை எவரும் முன்வரவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். அரசியல் காரணங்களுக்காக, எதிர்க்கட்சிகள் இது நற்செய்தி அல்ல என்று கூறினாலும், நாட்டைப் பற்றி சிந்தித்தால், இது மிகவும் ஒரு நற்செய்தி என்பதைக் கூற வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் யாருடைய முகத்தையும் பார்க்காமல், சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் மாத்திரமே மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஈடுபடுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கூற்றுப்படி, ஆர்ஜென்டீனா, ஈக்வடோர் ( Ecuador) மற்றும் கானாவில், இருதரப்புக் கடன்களுக்காக அன்றி, வர்த்தகக் கடன்களுக்கே ( Commercial Loans) 25% கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எமது வர்த்தகக் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் நாம் இன்னும் ஈடுபட்டு வருகின்றோம். அவரது அறியாமையால், இன்னும் முடிவு எட்டப்படாத ஒரு விடயத்தைப் பற்றியே குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வலிமைக்கு ஏற்பவே இதனைச் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி இந்த அளவுகோல்கள் மாறுகின்றன. இவ்வாறான சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழ்நிலைகளைக் கருத்திற்கொள்ளாமல் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுவது ஏற்புடையதல்ல என்பதைக் கூற வேண்டும்.
இந்த நாட்டை பேரழிவில் இருந்து மீட்பதற்கான முதல் அடியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ளார். இரண்டாவது படி, அதைப் பாதுகாத்து முன்னேறுவதாகும். இல்லையேல் நாடு 02 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்புவதை தடுக்க முடியாது. இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகள், பிரதேச சபைகள், அரச திணைக்களங்கள் மற்றும் நலன்புரி போன்ற சமூக பாதுகாப்பு நலன்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவற்றின் செயற்பாடுகள் தேர்தலை எதிர்பார்த்து செய்யப்படுவதில்லை. நாம் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்கும் பணிகளையே நாம் மேற்கொள்கின்றோம் மாறாக அதனை விற்கவில்லை.
இலங்கையின் சட்டத்தின்படி ஸ்ரீலங்கன் விமான சேவையில் 49% மட்டுமே வேறு நிறுவனத்திற்கு வழங்க முடியும். அதற்கும் சர்வதேச அளவில் குறைந்தபட்ச ஆர்வமே உள்ளது. அதற்கு 06 நபர்களே முன்வந்துள்ளனர். அவர்களில் பொருத்தமான எவரையும் நாங்கள் இனங் காணவில்லை. இலங்கை தொழில்முனைவோருக்கு வழங்குவதாக இருந்தாலும் அவர்களும் அவர்களது இயலுமையை நிரூபிக்க வேண்டும். மேலும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) அடுத்த வாரம் தமது திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்து கலந்துரையாட உள்ளது.
இது கடன் மறுசீரமைப்பின் மற்றொரு நன்மையாகும். விமான நிலையத் திட்டத்துக்கு சீன நிறுவனங்கள் முன் வந்தாலும் ஜப்பானுடன் செய்து கொண்ட இணக்கப்பாட்டின் பிரகாரம், அந்த ஒப்பந்தங்கள் ஜப்பானிய நிறுவனங்களுக்கே வழங்கப்பட வேண்டும். மேலும், பாரிய நட்டத்தை சந்தித்து வரும் மத்தளை விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் ரஷ்ய-இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்தியாவின் 69 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் காங்கேசந்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை மிக விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என என்னிடம் தெரிவித்தார்” என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.