கள்ளக்குறிச்சி: பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்த நிலையில் போலீஸார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.
கள்ளக்குறிச்சி நகரில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் கைதான மாதேஷை காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள செயல்படாத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக மாதேஷ் விசாரணையில் தெரிவித்ததாக போலீஸார் கூறுகின்றனர். செயல்படாத அந்த பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி உள்ளதாகவும் அவர் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
மாதேஷ் அளித்த தகவலின் பேரில் பெட்ரோல் பங்கிற்கு நேரில் வந்து விசாரித்த சிபிசிஐடி போலீஸார் அந்த இடத்துக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க 562 கிராம அளவிலான கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.