கேரளாவில், அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் ஆடிப் பாடி ரீலிஸ் செய்த விவகாரத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக அவர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா நகராட்சி அரசு அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
இதில், அலுவலக ஊழியர்கள் 8 பேர் மலையாள பாடலுக்கு ஆடிப் பாடி ரீல்ஸ் செய்திருக்கின்றனர். அவர்களின் ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானைதையடுத்து இணையதளவாசிகள் சிலர் பாராட்ட, அரசு ஊழியர்கள் தங்களின் வேலைநேரத்தில் இவ்வாறு ரீல்ஸ் செய்வதா அல்லது மக்களுக்கு சேவை செய்வதா என ஒரு தரப்பினர் கேள்வியும் எழுப்பினர்.
இருப்பினும், இதற்கெல்லாம் நடவடிக்கை எடுப்பார்களா என நினைத்துக்கொண்டிருந்த ஊழியர்களுக்கு, நகராட்சி செயலாளரிடமிருந்து நேற்று ஷோ-காஸ் நோட்டீஸ் வந்திருக்கிறது.
அதில், ரீல்ஸ் செய்த அந்த 8 ஊழியர்களும், இது குறித்து 3 நாள்களுக்குள் விளக்கமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர், நோட்டீஸ் குறித்து பேசிய ஊழியர்கள் சிலர், `அலுவலக நேரத்தில் ரீல்ஸ் எடுக்கப்படவில்லை. இதனால் பணிக்கு இடையூறு உட்பட தங்கள் தேவைகளுக்காக வந்தவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை’ என்று தெரிவித்தனர்.