இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக இம்ரான் கான் மற்றும் பல்வேறு தலைவர்களுக்கு எதிராக ஆப்பாரா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவாகி இருந்தது. இந்த வழக்கு பற்றி மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதில், இம்ரான் கானை வழக்கில் இருந்து விடுவித்து, ஜுடிசியல் மாஜிஸ்திரேட் யாசீர் மெஹ்மூத் உத்தரவிட்டார். இதேபோன்று, இந்த வழக்கில், ஷா மஹ்மூத் குரேஷி, ஷேக் ரஷீத், ஆசாத் கைசர், ஷெஹ்ரியார் அப்ரிடி, பைசல் ஜாவித், ராஜா குர்ரம் நவாஸ் மற்றும் அலி நவாஸ் அவான் ஆகிய பிற தலைவர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இம்ரான் கான் 2022-ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக, ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு முதல் சிறையில் உள்ள அவரை, சில வழக்குகளில் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இவை தவிர அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், தன்னுடைய மகன்களான காசிம் மற்றும் சுலைமான் ஆகியோரை சந்திக்க அனுமதிக்கும்படி இம்ரான் கான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும்படி அரசு மற்றும் சிறை நிர்வாகத்திற்கு, ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பு கோர்ட்டு கேட்டு கொண்டுள்ளது.