இலவம்பாடி, செவந்தம்பட்டி கத்திரிக்காய் தெரியும்… `மட்டு குல்லா' கத்திரிக்காய் தெரியுமா?!

ஊதா நிற வரி கத்திரிக்காய், அடர் ஊதா நிற உஜாலா கத்திரிக்காய், பச்சை முள் கத்திரிக்காய் என கத்திரிக்காயில் பல நிறங்கள் உள்ளன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இலவம்பாடி முள் கத்திரிக்காய், செவந்தம்பட்டி கத்திரிக்காய், கடலூர் மாவட்டம் கோட்டுமுளை கத்திரிக்காய் என தமிழ்நாட்டிலும் நிறைய பாரம்பர்ய கத்திரிக்காய் வகைகள் உண்டு.

தமிழ்நாட்டைப் போலவே கர்நாடக மாநிலத்திலும் பாரம்பர்ய கத்திரிக்காய்கள் உண்டு. அவற்றில் மட்டு குல்லா என்றழைக்கப்படும் கத்திரிக்காய் அம்மாநிலத்தில் பிரபலமாக உள்ளது. பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் சுண்டைக்காய் போல் இருக்கும் இந்தக் கத்திரிக்காய்க்கு 2011-ம் ஆண்டு புவிசார் குறியீடும் (GI) வழங்கப்பட்டுள்ளது.

`மட்டு குல்லா’ கத்திரிக்காய்

கர்நாடகாவின் கடலோரப் பகுதி மாவட்டமான உடுப்பியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மட்டு என்ற கிராமத்தைச் சுற்றி அதிகம் இந்தக் கத்திரிக்காயை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கிடைக்கும் நீரும், மண் வளமும் இந்தக் கத்திரிக்காய்க்கு ஒரு தனித்துவமான சுவையைக் கொடுத்திருக்கிறது. கத்திரிக்காயின் அறுவடை சமயங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000 கிலோ மட்டு குல்லா கத்திரிக்காய் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இவ்வளவு தனித்தன்மை கொண்ட மட்டு குல்லா தோன்றியதற்கு நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. புராண கதையின்படி, கர்நாடகாவின் துறவியும் தத்துவஞானியுமான ஸ்ரீ வாதிராஜா இந்தக் காயின் விதைகளை 15-ம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த மட்டு பகுதி விவசாயிகளுக்கு கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது. அதனால், இது வாதிராஜ குல்லா என்றும் அழைக்கப்படுகிறது.

`மட்டு குல்லா’ கத்திரிக்காய்

உடுப்பியில் உள்ள கிருஷ்ணருக்கு அறுவடை செய்யும் முதல் கத்திரிக்காயை வழங்கும் மரபு இன்று வரை நடைமுறையில் உள்ளது.

புராணத்தின் படி, ஒரு பெண் வெண்மை நிறமுள்ள கத்தரிக்காயில் பால் எடுத்துச் செல்லும் போது அதை சிலர் வெள்ளிப்பானை என்றும், சிலர் கத்திரிக்காய் என்றும் கூறினார். பின்னர் அது ‘குல்லக்காய்’ என்று அழைக்கப்பட்டது. உடுப்பி கிருஷ்ண மடத்தில் மட்டு குல்லா கொண்டு செய்யப்படும் சாம்பார் முதன்மையாகக் கருதபடுகிறது. புராண அனுசரணையின் மூலம் பிரபலமடைந்த காய்கறிகளில் இந்த மட்டு குல்லா கத்திரிக்காய் சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது.

புராண பின்னணி இருந்தாலும் சுவையிலும் தோற்றத்திலும் தனித்துவமான அம்சத்தையும் கொண்டிருக்கிறது. மட்டு குல்லா வட்ட வடிவத்துடன் வெளிர் பச்சை மற்றும் வெளிப்புற தோலில் மங்கலான வெள்ளை கோடுகளோடு காணப்படும். இது மெல்லிய தோலுடன் கத்திரிக்காய்க்கே உரிய செறிவான சதைப்பகுதியையும், காயின் மேல் பகுதியில் முட்களையும் கொண்டுள்ளது. இதன் அமைப்பு வழக்கமாக உள்ள கத்தரிக்கையை விட உறுதியானது.

`மட்டு குல்லா’ கத்தரிக்காய்

மட்டு குல்லா கத்திரிக்காயை மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைத்தாலும் பிற காய்களோடு சேர்த்து சமைத்தாலும், அதன் சுவையையும் தனித்தன்மையையும் பாதுகாக்கிறது.

அக்டோபர் முதல் பிப்ரவரி வரை அதிகம் அறுவடையாகிறது. அந்த சமயத்தில் இதன் நுகர்வு அதிகமாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கும் இந்தக் கத்திரிக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

`மட்டு குல்லா’ கத்திரிக்காய்

கர்நாடகாவின் உடுப்பி மற்றும் தட்சிண கன்னடாவின் கடலோர பகுதிகளை சேர்ந்தவர்களால் இந்தக் கத்திரிக்காய் உலகம் முழுவதும் பிரபலமானது. பஜ்ஜி, குழம்பு, சாம்பார் ஆகியவற்றில் இந்தக் கத்திரிக்காய் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சாம்பார், புளி சாறு மற்றும் பச்சை மிளகாயுடன் காய்கறிகளை சமைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. உணவகங்களை விட வீடுகளில் அதிகம் இது சமைக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகளுக்கும் வருமானம் கொடுக்கக்கூடிய காய்கறியாக இருந்து வருகிறது. உடுப்பி பக்கம் போனால் மறக்காமல் மட்டு குல்லா கத்திரிக்காய் குழம்பை சாப்பிட்டு பாருங்கள். இதன் விதைகள் ஆன்லைனிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.