புதுடெல்லி: ஹாத்ரஸ் சம்பவத்துக்குப் பின் போலே பாபாவின் குவாலியர் ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மத்தியப் பிரதேசத்தின் பாஜக அரசு எடுத்துள்ளது.
ஹாத்ரஸில் 121 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா நடத்திய கூட்டம். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கி உள்ளது. இதையடுத்து, அண்டை மாநிலங்களில் உள்ள போலே பாபாவின் ஆசிரமங்கள் மீதும் அதன் அரசுகள் கவனம் செலுத்தத் துவங்கி விட்டனர். மபியின் குவாலியரில் டிக்ரா சாலையிலுள்ள ஹரி விஹார் எனும் கிராமத்தில் பாபாவின் ஆசிரமம் அமைந்துள்ளது.
பரந்த நிலப்பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன் இந்த ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பாபாவின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக மட்டும் 30 பேர் கொண்ட ‘நாரயணி சேனா’ எனும் தனிப்பட்ட பாதுகாவலர் படை உள்ளது. இந்நிலையில், இன்று நண்பகலில் அங்கு சென்ற ம.பி அரசு அதிகாரிகள் குவாலியரின் பாபா ஆசிரமத்திற்கு சீல் வைத்துள்ளனர். இங்கு அவ்வப்போது வரும் போலே பாபா சில நாள் தங்குவதுடன் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது உண்டு.
இக்கூட்டத்திற்காக பல ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வந்து கலந்து கொள்வதும் வழக்கமாக உள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் இடையேயும் பாபா மிகவும் மதிப்பிற்குரியவராக உள்ளார். இதன் காரணமாக, அக்கிராமத்தின் குடியிருப்பு காலனிக்கு போலே பாபாவின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தில் பாபாவை சுற்றி அதிகமாக சீடர்களான இளம்பெண்கள் இருப்பதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் நீதிமன்ற அனுமதியுடன் பாபாவின் குவாலியர் ஆசிரமத்தை சோதனை இடவும் மபி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைளும் குவாலியரில் துவக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற ஆசிரமங்கள், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் பாபவிற்காக அமைந்துள்ளன. இதன்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.