சேலம்: சண்முகம் படுகொலை குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் கொலை செய்யப்பட்டு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக நிர்வாகி சண்முகத்தின் உடலுக்கு வியாழக்கிழமை இரவு அதிமுக பொதுச் செயலாளர் எட்பாடி பழனிச்சாமி மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சண்முகத்தின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “சண்முகம் படுகொலையின்போது அந்த தெருவில் உள்ள தெருவிளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது.
இந்த கொலைக்கு காரணமானவர் 55-வது வார்டைச் சேர்ந்த தனலட்சுமியின் கணவர் சதீஷ், தனலட்சுமி மற்றும் பலர் இந்த படுபாதக கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது. இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பலரிடம் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. ஆனால் திட்டமிட்டு இந்த கொலையை செய்திருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றியவர் சண்முகம். அந்த பகுதியில் இருக்கின்ற மக்களிடத்திலும் ,அனைவரிடத்திலும் அன்பாக நடந்து நல்ல மதிப்பை பெற்றவர். கட்சிக்காக பாடுபட்டவர். அனைத்து தேர்தலிலும் அர்ப்பணிப்போடு பணியாற்றி செயல்படக்கூடிய நல்ல தொண்டர் . அவர் இரண்டு முறை கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி இருந்தார்.
அவர் கட்சிக்காக உழைத்த தொண்டனை கொடியவர்கள் கொலை செய்து குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் தொடர் கொலை நடந்து கொண்டே இருக்கிறது.தினந்தோறும் கொலை நடக்கிறது. கொலைகள் நடக்காத நாளே இல்லை .இந்த கொலை குற்றம் செய்தவர் அந்த பகுதியிலேயே போதை பொருள் விற்பனை செய்வதாகவும், அதோடு லாட்டரி சீட்டு விற்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது .
இப்படி சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட வரை காவல்துறையில் சண்முகம் புகார் செய்த காரணத்தால் பொறுத்துக் கொள்ள முடியாமல் கொலை நடந்திருக்கிறது. தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரோடு இருந்த குற்றவாளிகள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு சண்முகத்தை படுகொலை செய்திருக்கிறார்கள். இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் . சண்முகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.