ஜெய்ப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலின்போது, ராஜஸ்தானின் தவுசா மக்களவைத் தொகுதியில் பாஜக தோற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியதற்கு இணங்க, அம்மாநில மூத்த அமைச்சர் கிரோடி லால் மீனா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜஸ்தானில் பஜன்லால் ஷர்மா தலைமையிலான அமைச்சரவையில் முதல்வர் மற்றும் இரண்டு துணை முதல்வர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் கிரோடி லால் ஷர்மா. பாஜகவின் மூத்த தலைவரான இவர், 2 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். விவசாயம் மற்றும் தோட்டக் கலை, ஊரக வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, நிவாரணம் மற்றும் குடிமைப் பாதுகாப்பு, மற்றும் பொது வழக்குத் தீர்வுத் துறை ஆகிய நான்கு துறைகளின் அமைச்சர்.
தற்போது அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கிரோடி லால் மீனா, “நாடாளுமன்றத் தேர்தலின்போது தவுசா மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றிபெறாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என கூறி இருந்தேன். தவுசா தொகுதி உட்பட 7 மக்களவைத் தொகுதிகளின் பொறுப்பை பிரதமர் மோடி எனக்கு அளித்திருந்தார். 7 தொகுதிகளின் வெற்றிக்காகவும் நான் கடுமையாக உழைத்தேன். இருந்தும், தவுசா தொகுதி மட்டுமின்றி கிழக்கு ராஜஸ்தானின் டோங்க், சவாய் மாதோபூர், கரௌலி-தோல்பூர் மற்றும் பாரத்பூர் ஆகிய தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறவில்லை. எனவே, நான் ஏற்கனவே கூறியபடி எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என தெரிவித்தார்.
அப்போது, பாஜக மீதும், பஜன்லால் அரசு மீதும் உள்ள அதிருப்தியின் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கிரோடி லால் மீனா, “நான் கோபப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. நான் முதல்வரைச் சந்தித்தேன். அப்போது அவர், மிகவும் மரியாதையுடன், ‘உங்கள் ராஜினாமா ஏற்கப்படாது’ என தெரிவித்தார். ஆனால், தவுசா தொகுதியில் வெற்றி பெறாவிட்டால் ராஜினாமா செய்வேன் என அறிவித்ததால், ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கூறினேன். அரசு பங்களா, அரசு கார், அலுவலகம் போன்றவற்றில் என்னால் உட்கார முடியாது என்பதை தெரிவித்தேன்” என கூறினார். எனினும், கிரோடி லால் மீனாவின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை.