வேலூர்: “விக்கிரவாண்டியில் நடப்பது இடைத்தேர்தல் அல்ல, அது எடைத்தேர்தல்,” என்று வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நிறைவு விழா இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட இறகுப்பந்து சங்கத்தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இறகுப்பந்து சங்க மாநில தலைவரும், பாமக தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை, பதக்கங்களை வழங்கினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழக அரசு இறகுப்பந்து போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் உள்விளையாட்டு அரங்குகளை கட்டித்தர வேண்டும். டாஸ்மாக் மூலம் 90 மில்லி மதுபானங்கள் விற்கப்போவதாக அரசு அறிவித்திருப்பது திமுக அரசுக்கு பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் குறித்தும் எந்த கவலையும் இல்லை என்று தெரிகிறது. தமிழக முன்னேற்றம் குறித்து அக்கறையில்லை. மதுவை திணித்து நலத்திட்டங்களை கொண்டுவரவே நிர்வாகம் செய்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு ஐந்தாறு நிறுவனங்கள் மதுபானங்கள் விநியோகிக்கின்றன. அதில் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் நிறுவனங்கள் அடங்கும். படிப்படியாக மதுவிற்பனையை குறைக்கவும், பார்களை மூட வேண்டும். இல்லையென்றால் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும்.
கள்ளச் சாராயம் விற்கக்கூடாது என்று சட்டப்பேரவையில் கடுமையான சட்டத்தை கொண்டு வந்துவிட்டு, தற்போது டாஸ்மாக் மூலம் 90 மி.லி மதுவிற்பனையை அறிவித்திருப்பது அரசின் சட்டம் மீது அரசுக்கே நம்பிக்கை இல்லையா என்பதையே உணர்த்துகிறது. திமுகவால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்றால், ஒரு மாதத்துக்கு எங்களிடம் ஆட்சியை அளிக்கட்டும். தமிழகத்தில் ஒரு சொட்டுகூட கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்கி காட்டுகிறோம்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய பலி நடந்து ஓரிரு வாரங்களிலே விழுப்புரம் பி.குமாரமங்கலத்தில் முதியவர் ஒருவர் கள்ளச் சாராயம் குடித்து இறந்துள்ளார். இதுதான் முதல்வர் இரும்புகரம் கொண்டு அடக்குவதா?. கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரத்தில் காவல் துறை உயரதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் தொடர்புள்ளது.
சிபிசிஐடி விசாரணை மூலம் உண்மை வெளியே வராது என்பதாலேயே சிபிஐ விசாரணையை கோருகிறோம். விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் பஞ்சாயத்து தேர்தலைவிட மிக மோசமாக நடைபெறுகிறது. அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அங்கு முகாமிட்டு தேர்தல் பணியாற்றுகின்றனர். திமுகவினர் ரூ.2 ஆயிரம் பணம் தருவதாகக்கூறி பெண்களை அழைத்து சென்று ஓரிடத்தில் அடைத்து வைக்கின்றனர்.
வீடு வீடாகச் சென்று வேட்டி, சேலைகள் வழங்குகின்றனர். அவர்களை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. விக்கிரவாண்டி தொகுதியில் எந்த வளர்ச்சியும் கிடையாது. நந்தன் கால்வாய் திட்டத்தை 50 ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். விக்கிரவாண்டியில் நடப்பது இடைத்தேர்தல் அல்ல, அது எடைத்தேர்தல்.
தமிழகத்தில் அளிக்கப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் மூலம் ஆபத்து வரஉள்ளது. ஏற்கெனவே இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்த வேண்டும் என்று கடந்த 2010-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை.
தற்போது மராத்தா இடஒதுக்கீடு வழக்கு முடிந்தது. உச்சநீதிமன்றம் 8-ம் தேதி விடுமுறைக்கு பிறகு 69 விழுக்காடு தரவுகள் உள்ளதா? என கேட்க உள்ளது. அப்போது, தமிழக அரசு தரவுகள் இல்லை எனக் கூறினால் 69 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.
பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜார்கண்ட், ஒடிஷா, தெலங்கானா மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் அஞ்சுகிறார். இதனால், சமூகநீதி பற்றி பேச இனி திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் தடுப்பணை கட்ட திட்டமிட்டிருப்பது தொடர்பாக அம்மாநில அரசுடன் பேசி தமிழகத்துக்கு சுமூகமான நிலையை எட்டுவோம்,” என்று அவர் கூறினார்.