திருச்சி: நீட் தேர்வு குறித்து நடிகர் விஜய் பேசியது சரியில்லாத கருத்து என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக என்ற கட்சி அழிவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணம் ஜெயக்குமார். அவருடைய சொந்த ஊரிலேயே அவருடைய மகன் டெபாசிட் இழந்திருக்கிறார். அவர் நான் லண்டனுக்கு படிக்கப் போவது குறித்து பேசலாமா? இன்றைய இளைஞர்கள் ஒரு அரசியல்வாதி அனைத்திலும் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
தேர்தலில் ஒரு கட்சி ஜெயிக்க வேண்டுமென்றால் அந்த கட்சி தைரியமாக களத்தில் நிற்க வேண்டும். ஆனால் அதிமுக அப்படி நிற்கவில்லை. திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக ஒதுங்கியிருக்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
நடிகர் விஜய் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். விஜய் கூட திமுகவை சார்ந்த அரசியலை கையில் எடுக்கப் போகிறேன் என்றால் அதனை நாங்கள் வரவேற்கிறோம். அப்படி நடந்தால் பாஜக தனித்து நிற்கும். அது எங்களுக்கு கூடுதல் பலம். எங்களுடைய அரசியல் இன்னும் எளிமையாகும்.
தமிழ்நாட்டின் எத்தனையோ மக்கள் நீட் வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள் அனைவரும் பாஜக பக்கம் வருவார்கள். எனவே இதை எங்களுடைய பலமாகத்தான் நான் பார்க்கிறேன். ஆனால் ஒரு சாதாரண மனிதனாக பார்த்தால் விஜய் கூறியது சரியில்லாத கருத்து. அறிவியல்ரீதியான தரவுகளுடன் அவர் பேசினால் சிறப்பாக இருக்கும்” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
வாசிக்க > ‘நீட் தேர்வு தேவையில்லை’ – மாணவர்களுக்கான விருது விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு