புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி மற்றும் பாஜக அமைச்சர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையுடன் பாஜக எம்எல்ஏ-க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ரங்கசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதற்கும் தயார் என்ற நிலையில் பாஜக மேலிட முடிவை ரங்கசாமி எதிர்நோக்கியுள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் தொடக்கம் முதலே என்ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ஒட்டலும் உரசலும் தொடர்ந்து வருகிறது. பாஜக எம் எம்எல்ஏக்கள் வாரியத்தலைவர் மற்றும் அமைச்சர் பதவிகளைக் கோரிவந்தனர். இதற்கு நடுவில் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பாஜக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டு தோற்றார்.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி மற்றும் பாஜக அமைச்சர்களுக்கு எதிராக பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் போர்கொடி தூக்கினர். இதையடுத்து ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணனை பாஜக எம்எல்ஏ-க்களும், பாஜக ஆதரவு சுயேட்சைகளும் சந்தித்து ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் நடப்பதாகக் குற்றம்சாட்டினர். முதல்வர் ரங்கசாமி தங்களை புறக்கணிப்பதாகவும் நேரடியாக தெரிவித்தனர். பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் பேசிய ஆடியோ பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முக்கியமாக, முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் புரோக்கர்கள் மூலம் செயல்படுவதாகவும், அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் புரையோடியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதனிடையே பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், சிவசங்கர், அங்காளன், ஸ்ரீநிவாஸ் அசோக், வெஙகடேசன் ஆகியோர் கடந்த 1-ம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் பாஜக தலைவர் நட்டா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் ஆகியோரை சந்தித்து குறைகளை தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ்ஜியிடமும் ஆட்சியாளர்கள் செயல்பாடே மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். டெல்லியில் பாஜக எம்எல்ஏ-க்கள் அடுத்தடுத்து பாஜக தலைவர்களை சந்தித்து புகார் செய்வது முதல்வர் ரங்கசாமி அரசுக்கு தொடர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இன்னும் 2 வாரத்தில் புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
அதற்கு முன்பாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், சட்டப்பேரவையிலும் பாஜக எம்எல்ஏ-க்களின் அதிருப்தி எதிரொலிக்கும் வாய்ப்பு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் விரிசலால் தனது ஆட்சிக்கு நெருக்கடி உருவாகியுள்ளதை முதல்வர் ரங்கசாமி உணர்ந்துள்ளார். ஆனால், அதுபற்றிய கேள்விகளுக்கு வழக்கம்போல் பதிலளிக்க மறுக்கிறார்.
பாஜக தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து அடுத்தக்கட்ட முடிவை ரங்கசாமி எடுக்க தயாராகிவிட்டார் என அவரது தரப்பில் சொல்கின்றனர். பாஜக எம்எல்ஏ-க்கள் செயல்பாட்டால் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ரங்கசாமி, தேவைப்பட்டால் மக்களைச் சந்திக்கவும் தயார் என்ற மனநிலையில் இருப்பதை பாஜக தரப்புக்கு தெளிவாக்கியுள்ளார் என்கின்றனர். பாஜக தலைமை என்ன செய்யப் போகிறது என்பதை புதுச்சேரி அரசியல் களம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.