விழுப்புரம்: “திமுகவின் ஊதுகுழலாகவே ராகுல் காந்தி மாறிவிட்டார்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் தமாகாவின் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் இன்று (ஜூலை 4)நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்களுக்கு மனமாற்றம் தேவை. 2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமாக இந்த தேர்தல் அமைய வேண்டும்.
இத்தேர்தலில் திமுக அமைச்சர்கள் அதிகார துஷ்பிரயோகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதை தேர்தல் ஆணையம் கண்டித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் இதுகுறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.அமைச்சர்கள் சென்னை கோட்டையில் பணியாற்றாமல், விக்கிரவாண்டி தொகுதியிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பணபலம், ஆள்பலம், அதிகார பலத்துடன் இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றனர். ஜனநாயகமா, பணநாயகமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாள்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அடித்தளமிடுவது டாஸ்மாக் மதுக்கடைகள்தான். 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் போதைப் பொருள்களின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. இதைத் தடுக்க தவறிய அரசாக, தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது.
இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாத, தகுதியற்ற அரசாக திமுக செயல்படுகிறது என்ற உணர்வு தமிழக மக்களிடம் ஏற்பட வேண்டும். கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி 65 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி, பதற்றத்தைத் தணிக்க தமிழக முதல்வருக்கு விருப்பமில்லை. ஆனால், விக்கிரவாண்டி தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருந்து கொண்டு மக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமாக செயல்படபோவதில்லை என்பதை முதல் கூட்டத் தொடரிலேயே நிரூபித்துள்ளனர். மக்கள் பிரச்சினையைப் பற்றி பேசி, அதற்கு தீர்வு காணும் இடம்தான் நாடாளுமன்றம். எனவே நாடாளுமன்றத்தை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வில் தவறு நடைபெற்றுள்ளதை உணர்ந்து, அதை சரி செய்யவும், தவறு செய்பவர்களைக் கடுமையாக தண்டிக்கவும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது திமுக அரசு. நீட் விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார். அவர் தற்போது திமுகவின் ஊதுகுழலாக மாறியுள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய – மாநில அரசுகள் கலந்து பேசி, ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்” என்றார்