மதுரை: போராட்டங்களில் பங்கேற்கவிடாமல் விவசாயிகளை வீட்டுக் காவலில் வைக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரிய வழக்கில் திருச்சி மாநகர் காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘விவசாயிகளின் நலனுக்காக மத்திய – மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், இப்போராட்டங்களில் பங்கேற்கவிடாமல் போலீஸார் என்னை வீட்டுக்காவலில் சிறைபடுத்துகின்றனர்.
கடந்த ஜூன் 20-ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டபோது திருச்சி உதவி காவல் ஆணையர் என்னை வீட்டுக்காவலில் சிறை வைத்தார். இதேபோல் சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவிடாமல் போலீஸார் என்னை வீட்டுக்காவலில் வைத்தனர்.
இந்த நடவடிக்கையை நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்னையும், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தை சேர்ந்தவர்களையும் அவ்வப்போது வீட்டுக்காவலில் வைக்கும் காவல்துறையின் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, மனு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.