சென்னை: தமிழகத்தில் அரசு திட்டங்களின் பயன்கள் உடனுக்குடன் மக்களை சென்று சேர்வதை, முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பயனாளிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் மகளிர் உரிமை, விடியல் பயணம், காலை உணவு உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திட்ட பயனாளிகளை ‘நீங்கள்நலமா’ திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டப் பயனாளியான கோவையை சேர்ந்த சித்திரலேகாவிடம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் அவர் பெற்ற மானியம், கடன் குறித்து கேட்டறிந்தார். மாற்றுத் திறனாளி பராமரிப்பு உதவித்தொகை பெறும் பள்ளி மாணவன் சஞ்சய்யின் தாயாரிடம், உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை சரியாக வருகிறதா என்றும், மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர்களின் செயல்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
அதேபோல, ‘நம்மை காக்கும் 48’திட்டத்தில் பயனடைந்த மணி கண்டன் என்ற பயனாளி, செங்கல்பட்டை சேர்ந்த மாற்றுத் திறன் பயனாளி, காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவியின் தாயாரான ராம நாதபுரத்தை சேர்ந்த சங்கீதா ஆகியோரிடமும் திட்டங்கள் குறித்து முதல்வர் விசாரித்து அறிந்தார்.