நீட் தேர்வு மோசடி விவகாரம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கும் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள், நீட் மோசடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பினார்கள். ஆனால், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்று ‘இந்தியா’ கூட்டணியில் ஒருமித்த குரல் எழவில்லை என்கிறார்கள்.
இதை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காண்பித்திருக்கிறார். ‘இந்தியா கூட்டணி தலைவர்கள், நீட் தேர்வு முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் மட்டுமே கூறுகிறார். அவரது குரலுக்கு இந்தியா கூட்டணியில் ஆதரவு இல்லை’ என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.
நீட் தேர்வு மோசடிகள் குறித்து பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘நீட் தேர்வு மோசடியால் நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களின் குடும்பத்தினர் தங்களின் குழந்தைகளுக்கு படிப்புக்காக அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், மாணவர்களின் வாழ்நாள் கனவைச் சிதைத்திருக்கிறது. ஆகவே, இதில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்’ என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ராகுல் காந்தி அதில் முன்வைக்கவில்லை.
இந்த விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘நீட் தேர்வை கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்’ என்று ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும், ‘நீட் தேர்வு முறை மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தமிழகத்துக்கு நீட் விலக்கு கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய சட்ட முன்வடிவு நிலுவையில் இருக்கிறது’ என்ற விவரத்தையும் அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
நீட் தேர்வில் மிகப்பெரிய அளவுக்கு மோசடிகள் நடைபெற்றிருக்கும் நிலையில், அது குறித்து விரிவான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்தினால், பல உண்மைகள் வெளியே வரும் என்று ‘இந்தியா’ கூட்டணி கருதுகிறது. மேலும், இப்படியொரு விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்துவதன் மூலமாக, ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியாத அரசாக மோடி அரசு இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என்பதும் எதிர்க்கட்சிகளின் நோக்கம். அது தெரிந்துதான் நீட் தேர்வு மோசடி தொடர்பாக விவாதம் நடத்த அரசுத் தரப்பு தயாராக இல்லை.
நீட் தேர்வுக்கு மோசடிக்கு எதிராக தி.மு.க உள்பட ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிகள் தொடர்ந்து போராடிவருகின்றன. ‘இந்தியா’ கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரஸும் நீட் தேர்வை முன்பு கடுமையாக எதிர்த்து இருந்தாலும் தற்போது அதே கருத்தில் இருக்கிறதா எனும் கேள்வி எழுகிறது.
குறிப்பாக, 2019 மக்களவைத் தேர்தலின்போது, ‘நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்’ என்று தனது தேர்தல் அறிக்கையிலேயே காங்கிரஸ் கூறியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்’ என்று அப்போது பேசினார்.
ஆனால், அதன் பிறகு நீட் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாறியிருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அந்த மாற்றத்தைக் காண முடிந்தது.
அதாவது, ‘இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வு, க்யூட் தேர்வு என்று நடத்தும் நிலையை மாற்றி, இந்தத் தேர்வுகளிலிருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது. நீட் தேர்வுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட மாநில அரசே ஒரு நுழைவுத்தேர்வை நடத்த வழிவகை செய்யப்படும்’ என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது.
ஆகையால்தான், நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணி கோரிக்கை எழுப்பியபோது, நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் என்ற குரல் எல்லோரிடமிருந்தும் எழவில்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதைப்போல, நீட் ஒழிப்பு கோரிக்கையைப் பொருத்தளவில், முதல்வர் ஸ்டாலின் குரலுடன் சேர்ந்த மற்ற கூட்டணி கட்சிகளின் குரல் ஒலிக்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது ஒருங்கிணைந்திருப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நீட் தேர்வு மோசடி குறித்தே பேசுகிறார்கள். இந்த முறை நடந்த தேர்வை மீண்டும் நடத்த கோரிக்கை வைக்கிறார்களே தவிர, இப்படியான நீட் தேர்வே வேண்டாம் என அவர்கள் ஒருமித்த குரலில் சொல்லவில்லை.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88