புதுடெல்லி: பிஹாரில் 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பாலங்களின் உறுதித் தன்மையை ஆராய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிஹாரில் சிவான், சரண், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரன்,கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. பிஹாரில் கடந்த இரு வாரங்களாக பெய்துவரும் கனமழை காரணமாகவே பாலங்கள் பலமிழந்து இடிந்து விழுந்ததாக கூறப்பட்டாலும், பாலங்களை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பிஹார் அரசு சீரமைத்திருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரஜேஷ் சிங் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “பிஹாரில் பருவ மழைக் காலத்தில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்களால் பெரிய அளவில் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே மாநிலம் முழுவதும் பாலங்களின் உறுதித் தன்மையை ஆராய நிபுணர் குழு அமைக்கவும் அந்தக் குழுஅளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாலங்களை வலுப்படுத்தவும் அல்லது இடிக்கவும் மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
மேலும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையை பின்பற்றி பிஹாரில் பாலங்களின் உறுதித்தன்மை குறித்து தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பிஹாரில் பாலங்கள் இடிந்து விழுந்த சம்பங்களை தொடர்ந்து மாநிலத்தில் அனைத்து பழைய பாலங்களையும் ஆய்வு செய்துசீரமைக்க முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.