தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பேன் என்றிருக்கிறார். இந்த சூழலில்தான் த.வெ.க சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அப்படி கடந்த 27-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், “தமிழ்நாட்டில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இங்கே எது அதிகமாகத் தேவைப்படுகிறதென்றால், நல்ல தலைவர்கள்தான். நான் அரசியல் தலைவர்களை மட்டும் சொல்லவில்லை. எல்லாத் துறைகளிலும் சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் ஒரு பணி வாய்ப்பாக ஏன் வரக்கூடாது? அப்படி வர வேண்டுமென்பதே என் விருப்பம். நீங்கள் தினமும் செய்தித்தாள்களைப் படியுங்கள். ஒரே செய்தியை வெவ்வேறு நாளிதழ்கள் வெவ்வெறு மாதிரி எழுதுவார்கள்.
எல்லாவற்றையும் பாருங்கள், படியுங்கள். எது உண்மை, எது பொய் என ஆராயுங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன பிரச்னை, மக்களுக்கு என்ன பிரச்னை, சமூகத் தீமைகள் பற்றியெல்லாம் தெரிய வரும். அதைத் தெரிந்துகொண்டால், ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரங்களை நம்பாமல், எது சரி, எது தவறு, எது உண்மை, எது பொய் என்பதைத் தெரிந்துகொண்டு, நல்ல தலைவர்களைத் தேர்வுசெய்யும் விசாலமான பார்வை வரும். சமீப காலத்தில் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை, ஆளும் அரசு தவறவிட்டுவிட்டார்கள் என்று பேச வரவில்லை. அதற்கான மேடையும் இதுவல்ல. சில நேரங்களில் நம் வாழ்வை நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்றெல்லாம் பேசியிருந்தார்.
இதையடுத்து 3.7.2024 அன்று நடத்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், “தமிழகத்தில் இருக்கும் ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு இதை அடிப்படையிலேயே கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானதாக நான் பார்க்கிறேன். மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை பலமே தவிர பலவீனமல்ல. மாநில கல்விதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?
கிராமப்புற மாணவர்களுக்கு இது எவ்வளவு கடினமான விஷயம். மே 5-ம் தேதி நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுடிகள் நடந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதனால் நீட் தேர்வு குறித்து மக்களிடம் இருந்த நம்பகத்தன்மை முற்றிலும் போய்விட்டது. இதற்கு நீட் விலக்கு தான் உடனடி தேர்வு. நீட் விலக்கு குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். தமிழக மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காலதாமதம் செய்யாமல் இதற்கு தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசமைப்பு சட்டத்தை திருத்தி, சிறப்பு பொதுப்பட்டியல் ஒன்றை உருவாக்க வேண்டும்.
அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். இப்போது இருக்கும் பொதுப்பட்டியலில் உள்ள துறைகளில் என்ன சிக்கலென்றால் மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் முழுக்க முழுக்க கட்டுப்பாடு மத்திய அரசிடமே இருக்கிறது. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வேண்டுமானால் நீட் தேர்வு நடத்தி கொள்ளலாம். இதெல்லாம் உடனடியாக நடக்காது என்றும், நடக்க விடமாட்டார்கள் என்றும் எனக்கு தெரியும். இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஜாலியா படிங்க stress எடுத்துக்காதீங்க.. இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரியது. வாய்ப்புகள் அவ்வளவு கொட்டி கிடக்கிறது. ஒன்றிரண்டை தவற விட்டால் வருத்தப்படாதீங்க… கடவுள் இன்னொரு பெரிய வாய்ப்பை வைத்து உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அது என்னவென்று கண்டுபிடியுங்கள். தன்னம்பிக்கையோட இருங்க… நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “இதை தி.மு.க-வுக்கு ஆதரவாகவோ அல்லது பா.ஜ.க-வுக்கு எதிராகவோ பேசியிருக்கிறார் என எடுத்துக்கொள்ள முடியாது. கடந்த முறை நல்ல தலைவர்கள் இல்லை, செய்தித்தாள்களை படியுங்கள் என கூறியதுடன் முடித்துக்கொண்டார். அப்போது விஜய் எதுவும் பேசவில்லை என்ற விமர்சனம் கிளம்பியது. இதையடுத்துதான் நீட் குறித்து பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களில் பலர் நீட் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உண்மை. எனவே தனது கருத்தை தெளிவாக பேசியிருக்கிறார். அதேபோல் ஒன்றிய அரசு என அவர் கூறியதன் மூலம் திராவிட மாடல் அரசை ஆதரிக்கிறார் என்று சொல்லிவிட முடியாது.
நீட் பிரச்னைக்கு குரல் கொடுப்பதால் பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் மணிப்பூர் விவகாரம், வேலைவாய்ப்பு இல்லாதது என பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் விஜய் என்ன எதிர்வினையாற்ற போகிறார் என்பதை வைத்தே அவரது நிலைப்பாடு தெரியவரும். மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கிறது. அப்போதும், அதற்கு இடைப்பட்ட காலத்திலும் என்ன மாதிரியான குரலை விஜய் பதிவு செய்கிறாரோ அதை பொறுத்துதான் மக்கள் வாக்களிப்பார்கள். நீட் குறித்து பேசியதால் அவருக்கு தெளிவான கொள்கை இருக்கிறது என மக்கள் விஜய்க்கு வாக்களித்து விடுவார்கள் என சொல்லிவிட முடியாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88