பிரிட்டன் தேர்தல் ; தொழிலாளர் கட்சி வெற்றி – தோல்வியை ஒப்புக் கொண்டார் ரிஷி சுனக்

லண்டன்,

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் வரை உள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முடிவு செய்த ரிஷி சுனக் ஜூலை 4-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என கடந்த மே மாதம் அறிவித்தார். அதன்படி 650 இடங்களை கொண்ட நாடாளுமன்ற மக்களவைக்கான (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) தேர்தல் நேற்று நடந்தது. வாக்களிக்க தகுதி உடைய சுமார் 4 கோடியே 60 லட்சம் வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். தற்போதைய பிரதமரும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான ரிஷி சுனக், மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் வடக்கு இங்கிலாந்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டனில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.அதேபோல் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான கீர் ஸ்டார்மர், மனைவி விக்டோரியாவுடன் வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாக தொடங்கின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு படு தோல்வியே கிடைக்கும் எனக் கூறின. வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் அதையே காட்ட தொடங்கியிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி தொழிலாளர் கட்சி 339 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 72 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 இடங்களில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் ரிஷி சுனக் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.தோல்விக்கு தானே முழு பொறுப்பு ஏற்பதாகவும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.