’உலகின் 8வது அதிசயமே’ ஜஸ்பிரித் பும்ராவுக்கு விராட் கோலி கொடுத்த மிகப்பெரிய புகழாரம்

இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்றதையொட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வீரர்களுக்கான வரவேற்பும் பாராட்டு விழாவும் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். அப்போது டி20 உலகக்கோப்பையில் வெற்றி பெற்றது குறித்து பேசிய விராட் கோலி, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலகின் எட்டாவது அதிசயம் என தெரிவித்தார். பும்ராவை இந்தியாவின் பொக்கிஷம் என அறிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அந்த பேப்பரை உடனே கொடுங்கள் முதல் ஆளாக கையெழுத்து போட்டு கொடுக்கிறேன் என மனதார தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விராட் கோலி, ” டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டு வந்தது பும்ரா தான். எல்லோரையும்போல் நானும் ஆட்டம் கையை விட்டு சென்றுவிட்டது என்று ஒரு நேரத்தில் எண்ணிக் கொண்டிருந்தேன். அப்போது கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்கை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அந்த மேஜிக்கை கொண்டு வந்தது பும்ரா தான். உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணியிடம் இருந்து ஆட்டம் கை நழுவி செல்லும்போதெல்லாம் வந்து அற்புதமாக பந்துவீசி மீண்டும் மீண்டும் ஒட்டுமொத்த அணியையும் ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார். அவர் இந்திய அணிக்காக ஆடுவது அதிர்ஷ்டம். என்னைப் பொறுத்தவரையில் எட்டாவது அதிசயம் ஜஸ்பிரித் பும்ரா தான். அவரை இந்தியாவின் பொக்கிஷம் என அறிவிக்கச் சொன்னால் இப்போதே அந்த கடிதத்தில் கையெழுத்து போட தயாராக இருக்கிறேன். 

உலகக்கோப்பை வென்றதும் பர்படாஸில் இருந்து உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப விரும்பினோம். புயல் காரணமாக நான்கு நாட்கள் அங்கேயே மாட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. இருப்பினும் இப்போதும் ரசிகர்கள் கொடுக்கும் இவ்வளவு பெரிய சப்போர்ட் வியக்க வைக்கிறது. உண்மையாகவே கடந்த நான்கு நாட்களை என்னால் மறக்கவே முடியாது. வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் என்று கேட்டால், இந்த நாட்களும் அதில் இடம்பெறும். உலககோப்பை தொடர் முழுவதும் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி” என உருக்கமாக கூறினார். 

வெஸ்ட் இண்டீஸ் பர்படாஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வென்று உலக சாம்பியனான இந்திய அணி நேற்று காலை தாயகம் திரும்பியது. டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய அணியினர், மும்பையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் திறந்தவெளி வாகன பேரணி மேற்கொண்டனர். கடைசியாக வான்கடே மைதானத்தில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அத்துடன் 20 ஓவர் உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்த அனைவருக்கும் பிசிசிஐ சார்பில் பரிசுத் தொகையும் கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற விராட் கோலி, நள்ளிரவில் மீண்டும் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரின் குடும்பத்தினர் இருப்பதாக கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.