புதுடெல்லி: பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரான ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தனது வலிமையான தேசியவாத சிந்தனைகளால் இந்தியாவை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அவரது பிறந்தநாளில் மரியாதைக்குரிய அஞ்சலி. தாய்நாட்டுக்கான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “சிறந்த தேசியவாத சிந்தனையாளர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். வங்கத்தை நாட்டின் ஒரு அங்கமாக வைத்திருப்பதற்கான அவரது போராட்டமாக இருந்தாலும் சரி, ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுக்காக உச்சபட்ச தியாகம் செய்வதாக இருந்தாலும் சரி, நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் போராடுவது பற்றி பேசப்படும் போதெல்லாம் டாக்டர் முகர்ஜி நிச்சயமாக நினைவுகூரப்படுவார்.
அவரது தனித்துவமான முயற்சிகளுக்காக ஒவ்வொரு இந்தியனும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். பாரதிய ஜன சங்கத்தை நிறுவியதன் மூலம் நாட்டுக்கு கருத்தியல் ரீதியில் மாற்று வழிகளை வழங்கிய டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நீண்ட காலம் முதல் வழிகாட்டியாக இருப்பார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எங்களின் உத்வேகமும், ஜனசங்கத்தின் நிறுவனருமான டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜியை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர், தத்துவவாதி, தீவிர தேசபக்தர். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த, அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தியாகத்தை இந்த நாடு என்றும் மறக்காது” என தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, டெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “சுதந்திரப் போராட்ட வீரரும், கல்வியாளரும், நேர்மையான அரசியல் தலைவருமான அமரர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினம் இன்று. சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் திறம்படப் பணியாற்றியவர். இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியவர். நவீன பாரதத்தின் சிற்பிகளில் ஒருவர்.
காங்கிரஸ் கட்சி கஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி, இத்தனை ஆண்டு காலமாக கஷ்மீரைத் தீவிரவாதிகளின் கூடாரமாக வைத்திருந்த 370வது சட்டப்பிரிவை கடுமையாக எதிர்த்து, பாரதிய ஜன சங்கத்தை நிறுவி, தேச ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மேலான தலைவர்.
அமரர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் தேச ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்கான கனவுகள் ஒவ்வொன்றும் இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. அவருக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக புகழஞ்சலிகள். தொடர்ந்து அவரது வழி நடப்போம். தேசம் காப்போம்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு உகந்த கருத்துகளுடன் செயல்பட்ட, சுதந்திரப் போராட்ட தியாகிகளில் குறிப்பிடத் தகுந்தவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நிலப்பரப்பு அத்தனையும் இந்தியாவிற்கே சொந்தம் என்பதில், தன்னுடைய தீர்க்கமான முடிவை எப்போதும் வெளிப்படுத்திய மாபெரும் தலைவர். கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிற அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ அகற்றிட வேண்டுமென்று தொடர்ந்து முழங்கியவர். அவரது பிறந்த நாளான இன்று, தேச ஒற்றுமைக்கான அவரது சேவைகளையும், தியாகங்களையும் போற்றி வணங்குவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.