"திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கச் செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?" – முரளி ராமசாமி விளக்கம்

சமீபத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்து. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் முரளி என்.ராமசாமி மற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர், பொருளாளருடன் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக முன்னணி நடிகர்கள் நான்கு பேருக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்று தீர்மானம் போட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோலப் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஏகமானதாகத் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்தது நினைவிருக்கலாம். அதில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாசர்

* தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு, மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்னை செய்து வரும் சில நடிகர்களை வைத்து படம் துவங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தெரியப்படுத்திவிட்டு, அதன் பிறகு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

* தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிவிட்டு, படப்பிடிப்பு மற்றும் டப்பிங்கிற்கு வராமல் இழுத்தடிக்கும் நடிகர்களின் பிரச்னையை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வந்துதான் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. சம்பந்தப்பட நடிகர்களும், தயாரிப்பாளர்களும் நேரடியாகப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வருவதையும் வரவேற்கிறோம். தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு நலனுக்காகத்தான் இப்படி ஒரு தீர்மானம் போட்டிருக்கோம். திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் என்பவர் முதலாளிக்குச் சமம். அந்த முதலாளியை அவமதித்து குளறுபடி செய்யும் நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்பதில் உறுதியாக இருப்போம் உள்ளிட்ட தீர்மானங்கள் அப்போது பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில்தான் செயற்குழு கூட்டத்தில் நடந்தது குறித்துத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி என்.ராமசாமியிடம் கேட்டோம்.

“பொதுக்குழு நடந்து முடிந்த பின், நடிகர்கள் சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவங்களும் அவங்க பக்கம் ஆக்‌ஷன் எடுத்திருக்காங்க. சில பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைச்சது. சிலது இன்னமும் பேச்சு வார்த்தையில் இருக்கு. தயாரிப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக நாசர் சாரும் உறுதி கொடுத்திருக்கிறார். 5ம் தேதி நடந்த எங்களது செயற்குழுவில் அனைவரின் ஒத்துழைப்போடும் சில தீர்மானங்கள் கொண்டு வந்திருக்கோம்.

– தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையேயான புரிந்துணர்வு வழிகாட்டுதல் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும்.

– தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பரிந்துரை கடிதம் பெற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களின் ஷூட்டிங்கிற்கு பெப்சி உறுப்பினர்கள் தொழில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இது தொடர்பாக ஏற்கெனவே இரு அமைப்புகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளோம்.

முரளி ராமசாமி

அதேபோல, சங்கத்தின் பரிந்துரை கடிதம் பெற்று நடக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு ‘squad’ என்ற பெயரில் பெப்சியில் இருந்து யாரும் சென்று படப்பிடிப்பிற்கு இடையூறு செய்யக்கூடாது. படப்பிடிப்பு தளங்களில் எந்த ஒரு பிரச்னை இருந்தாலும் ஷூட்டிங்கை நிறுத்தக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் எழும் பிரச்னைகளை பெப்சி தொழிலாளர்கள் சங்கத்திற்கு முறையாகத் தெரியப்படுத்த வேண்டும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர் மற்றும் இரு தரப்பு நிர்வாகிகள் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்.

ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உட்படப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் எங்களுக்கு முழு ஒத்துழைப்பை நடிகர்கள் சங்கமும் வழங்கி வருகிறது” என்கிறார் முரளி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.