''அரசு போக்குவரத்துக் கழகங்களில் தகுதியற்ற 10,000 பேருந்துகள் இயக்கம்” – சிஐடியு பகீர் குற்றச்சாட்டு

விருதுநகர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட தகுதியற்ற 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாக சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சம்மேளனம் – சிஐடியு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பழகன், மண்டல பொதுச் செயலாளர் வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து, சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் அளித்த பேட்டியில், “போக்குவரத்துக்கழகங்கள் தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழகங்களாகவே செயல்பட வேண்டும். அவுட்சோர்ஸ் முறையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவது கைவிடப்பட வேண்டும். மினி பேருந்துகள் இயக்குவதை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு அரசே மினி பேருந்துகளை இயக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓடத் தகுதியற்ற 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றை மாற்ற வேண்டும். மின்சார பேருந்துகளையும் அரசே இயக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 19 மாதங்களாக ஓய்வூதிய பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஓய்வூதியர்களுக்கு கடந்த எட்டரை ஆண்டுகளாக பஞ்சப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை. இவ்வாறு ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் தொழிலாளர் பணத்தை எடுத்து அரசு செலவிட்டுள்ளது.

நஷ்டம் வரும் என்று தெரிந்தே 10 ஆயிரம் வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களுக்காக இயக்கப்படுவதே இதற்குக் காரணம். எனவே, போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடையேயான தொகையை அரசு வழங்க வேண்டும். அதை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்களிடம் கொடுத்து இதற்காக அனைவரும் குரல் எழுப்ப வலியுறுத்துவோம். கோரிக்கைகள் மறுக்கப்பட்டால் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.