Gaza: `90% காஸா மக்கள் இஸ்ரேல் தாக்குதல்களால் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்' – ஐநா அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை சுமார் 39,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், காஸா நிலைகுலைந்திருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், நிலமற்றவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் எச்சரிக்கை, ஐ.நா சபையின் எச்சரிக்கை என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல்.

காஸா மக்கள்

இந்த நிலையில், ஐ.நா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு குழு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “காஸாவில் 10 பேரில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயரும் பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடர்வதால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றொரு பாதுக்காப்பான இடத்தைத் தேடி செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் உடமைகள், பாதுகாப்பு, அத்தியாவசிய தேவைகளுக்காக மீண்டும் மீண்டும் தங்கள் வாழ்க்கையை மீட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தற்போதுவரை 90 சதவிகித காஸா மக்கள் இடம்பெயர்ந்ததாக விவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பாதுகாப்பாக இருக்கும் இடமாக கருதும் இடங்களிலிருந்தும், தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவத்தால் வெளியேற்றப்படுகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேற்கு காஸா நகரத்திற்கு வெளியேறுமாறு அந்தப் பகுதி மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. திங்கள்கிழமை (நேற்று) அங்கிருந்து அல் பலாவிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். இப்படி தொடர்ந்து மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர்.

போதிய மருத்துவ உதவியின்றி காஸா மக்கள்

காஸா பகுதியில் செயல்பட்டுவந்த 36 மருத்துவமனைகளில் 13 மட்டுமே செயல்படுகிறது. மக்கள், குறிப்பாக குழந்தைகள், ஒவ்வொரு நாளும் தண்ணீர் சேகரிக்க 6 முதல் 8 மணிநேரம் வரிசையில் நிற்கிறார்கள். காஸாவில் அவசர சுகாதார சேவையை அணுகுவதும் ஒரு சவாலாகவே இருக்கிறது. குறிப்பாக அவசரகால சேவைகளைத் தொடர்புகொள்வதற்கான வரையறுக்கப்பட்ட தகவல் தொடர்புகள், மருத்துவமனைகளை அடைவதற்கான அதிக போக்குவரத்துச் செலவுகள் என காஸா மக்கள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

அருகிலுள்ள மருத்துவ சேவையை அடையவே குறைந்தபட்சம் 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. வடக்கு காஸாவில், 80,000 பேர் பாதுகாப்பான தங்குமிடங்கள் இல்லாமல் தவிக்கின்றனர். இடிபாடுகளுக்கு மத்தியில் போதிய ஆடைகள், பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி பலர் தங்கியிருக்கின்றனர். மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்வதற்கான எரிபொருள், உதவிப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பநிலை காரணமாக உணவு பொருள்கள் விரைவில் கெட்டுப்போவதால், அங்கிருக்கும் மக்களுக்கு உடல் உபாதைகளும் தொடர்கிறது.

உணவுக்காக காத்திருக்கும் காஸா குழந்தைகள் – காஸா

மனிதாபிமான அமைப்புகளால் நடத்தப்பட்டுவந்த 18 பேக்கரிகளில் ஏழு மட்டுமே காஸாவில் செயல்படுகின்றன. இதில் ஓரளவு செயல்பட்டுவந்த ஆறு பேக்கரிகள் இப்போது எரிபொருள் பற்றாக்குறையால் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இஸ்ரேலிய அதிகாரிகள் MSF மருத்துவ உதவியை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை காஸா பகுதிக்குள் நுழைய அனுமதி மறுத்ததால், ஏப்ரல் மாத இறுதியிலிருந்து எந்த மருத்துவமனை நிர்வாகத்தாலும் காஸாவிற்குள் எந்த மருத்துவப் பொருட்களையும் கொண்டு செல்ல முடியவில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.