குஜராத் எல்லையில் இருக்கும் டாமனில் மது குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அங்கிருந்து மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திற்கு சட்டவிரோதமாக மது கடத்தப்படுவது வழக்கம். அது போன்று டாமனில் இருந்து வெளிநாட்டு மது வகைகள் காரில் கடத்தப்படுவதாக மகாராஷ்டிரா மாநில கலால் வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. டாமனில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், நந்துர்பர் வழியாக குஜராத்திற்கு கடத்தப்படுவதாக தெரியவந்தது. உடனே கலால் வரித்துறை அதிகாரிகள் நாசிக்கில் மது கடத்திவரப்படும் வாகனத்தை கண்காணித்தனர். அவர்கள் எதிர்பார்த்த வாகனம் வந்தது. அந்த காரை கலால் வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இரவு 11:30 மணிக்கு கடத்தல் வாகனத்தை பின் தொடர தொடங்கினர்.
கடத்தல்காரர்கள் மின்னல் வேகத்தில் காரை ஓட்டிச் சென்றனர். தங்களது காரை போலீஸார் பின் தொடர்ந்து வருவதை கவனித்த கடத்தல்காரர்கள், வேறு வழித்தடத்தில் செல்ல ஆரம்பித்தனர். உடனே கலால் வரித்துறை அதிகாரிகள் லசல்காவ் போலீஸாரின் துணையை நாடினர். போலீஸாரும் கடத்தல்காரர்களை விரட்ட ஆரம்பித்தனர்.
நாசிக்கில் இருந்து சந்த்வாட் நோக்கி கடத்தல்காரர்கள் சென்று கொண்டிருந்தனர். கலால் வரித்துறை அதிகாரிகள் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கடத்தல்காரர்களை விரட்டி வந்தனர். கடத்தல்காரர்களை நெருங்கியதும் அவர்களின் வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது, கடத்தல்காரர்கள் சென்ற கார் டிரைவர், கலால் வரித்துறை அதிகாரிகள் சென்ற காரின் முனையில் இடித்து தள்ளிவிட்டார்.
இதனால் கலால் வரித்துறை அதிகாரிகள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துவிட்டது. கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். கலால் வரித்துறை வாகனம் விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டிய கைலாஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 அதிகாரிகள் காயமடைந்தனர். மதுவை கடத்திச் சென்ற காரை போலீஸார் தேடி வருகின்றனர்.