புதுடெல்லி: கத்துவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். இதற்குப் பின்னால் உள்ள தீய சக்தியை இந்தியா நிச்சயம் முறியடிக்கும் என்று பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமானே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, திங்கள்கிழமை பகலில் ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, ராணுவ வீரர்கள் சென்ற கான்வாய் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர். பல வீரர்கள் காயமடைந்தனர். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த பகுதிகயில் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் ராணுவம் உறுதியாக உள்ளது என்றார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் பட்நோடாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நமது தீரமிக்க 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கடினமான நேரத்தில் நாடு அவர்களுடன் துணைநிற்கும். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கியுள்ளது. அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதில் ராணுவம் உறுதியாக உள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய நான் வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு செயலாளர் அரமானேவும் தனது ஆழ்ந்த வருத்ததை தெரிவத்துள்ளார். அவர் கூறுகையில், “துணிச்சலான ஐந்து வீரர்களை இழந்தது வருத்தமளிக்கிறது. அந்தத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தன்னலமற்ற சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். அவர்களைக் கொன்றவர்கள் பழிவாங்கப்படுவார்கள். இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள தீய சக்தியை இந்தியா அழிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளரின் இந்தச் செய்தியை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.