வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பைடன் சரிவர பதில் அளிக்கவில்லை. மேலும் ஜோ பைடனின் மோசமான பதில்களால் அவரது சொந்த கட்சியினரே அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
அதோடு, அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை மாற்றுவதற்கு அவரது கட்சியினர் திட்டமிட்டு வருவதாகவும் பேசப்பட்டு வந்தது. இது குறித்து விளக்கமளித்த ஜோ பைடன், விவாத நிகழ்ச்சிக்கு முன்பு பல்வேறு பயணங்களை மேற்கொண்டதால் சோர்வு காரணமாக தன்னால் சரிவர செயல்பட முடியவில்லை என்றும், அதிபர் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடன் நீடிப்பார் என நம்புவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ஜோ பைடன் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் நீடிப்பார் என்று நம்புகிறேன். அவரிடம் இருக்கும் கர்வம் காரணமாக அவர் வெளியேற விரும்ப மாட்டார்.
அவருடன் நடந்தது ஒரு விசித்திரமான விவாதம். ஏனெனில் அவர் அளித்த பதில்கள் எதுவும் அர்த்தமுள்ளதாக இல்லை. அவை பதில்கள் கூட இல்லை. அவரது பதில்கள் அர்த்தமோ, உணர்வோ இல்லாத வார்த்தைகளாக மட்டுமே இருந்தன” என்று தெரிவித்துள்ளார்.