மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மற்ற பகுதிகளில் கனமழை பொழியும் என ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, நவி மும்பை மற்றும் ஊரக பகுதிகளான ரத்னகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) கனமழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெற இருந்த மும்பை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பதிவான மழை காரணமாக நகர பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை அன்று மும்பையில் சில மணி நேரங்களில் சுமார் 300 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையால் மரங்கள் வேரோடும், சில இடங்களில் கிளையும் முறிந்து விழுந்துள்ளது. மேலும், 12 இடங்களில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டுள்ளது. இதில் 72 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர் இடிந்து விழுந்துள்ளன.
முதல்வர் விளக்கம்: “சுமார் 5,000-க்கும் மேற்பட்ட இடங்களை மும்பை பெருநகர மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறது. அரபிக் கடலில் ஏற்படும் கடல் சீற்றம் மற்றும் உயரமான அலைகளால் கடல் நீர், மித்தி ஆற்றின் வழியே வராத வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதியில் இருந்து நீரை வெளியேற்ற மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. வடிகால் வசதியில் சோதனை முயற்சியாக மைக்ரோ டனலிங் (சுரங்கம்) போன்றவற்றை நாட்டிலேயே முதல் முறையாக மேற்கொண்டு உள்ளோம். மக்களுக்கு உதவும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது” என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.