விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 6 வாக்குச்சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14-ம் தேதி துவங்கியது. 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 26-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், 7.10 மணிக்கு அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 42-வது வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது மனைவி வனிதா, தந்தை அரிபுத்திரியுடன் வந்து வாக்களித்தார்.



பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி காலை 9.10 மணிக்கு வாக்களித்தார். மிகவும் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள ராதாபுரம், குண்டலப்புலியூர், பனையபுரம் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் ஒட்டன் காடுவெட்டி, காணை வாக்குச்சாவடிகளில் 1 மணி நேரமும், கருங்காலிப்பட்டு, கல்பட்டு, மாம்பழப்பட்டு, பொன்னங்குப்பம் ஆகிய வாக்குச்சாவடியில் 30 நிமிடங்களும் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.

இன்று காலை 7.30 மணி முதல் 9 மணிவரை எமகண்டம் என்பதால் காலை 7.10 மணிக்கு திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவும், 9.10 மணிக்கு பாமக வேட்பாளர் அன்புமணியும் வாக்களித்தனர். உள்ளாட்சித் தேர்தல் உட்பட இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இத்தேர்தலில் தனக்காக வாக்களித்தார்.

இன்றைய தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, சுயேட்சை வேட்பாளர்கள் சேகர், பாஸ்கர், கலிவரதன், சிவசக்தி, சிவா, தமிழ்மணி, தட்சணாமூர்த்தி, முகமது சைபுல்லா ஆகியோர் மட்டுமே விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்தவர்களாவர். நாதக வேட்பாளர் அபிநயா விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.