நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயியான பழனி நாயக்கர். தனது கால்நடைகளை விற்ற பணத்தை வங்கியில் செலுத்துவதற்காகப் பையில் பணத்தை எடுத்து வைத்துக்கொண்டு நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து ராசிபுரம் புறப்பட்டார். ராமநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அவர், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரிடம் லிப்ட் கேட்டு ராசிபுரம் சென்று கொண்டிருந்தார்.
கோனேரிப்பட்டி ஏரிக்கரை பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பையிலிருந்த 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறியபடியே சென்றது. சில மீட்டர் தொலைவிற்குப் பையிலிருந்து நோட்டுகள் சிதறியபடியே சென்றதால், இதனைப் பார்த்த சிலர் முதியவர் சென்ற இருசக்கர வாகனத்தைத் துரத்திச் சென்று அவரிடம் விஷயத்தைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே அவர் இருசக்கர வாகனத்தை நிறுத்த சொல்லி சாலையில் கிடந்த நோட்டுகளை எடுத்தார்.
பலரும் பணத்தைச் சேகரித்து முதியோரிடம் கொடுத்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட அவர் கால்நடைகள் விற்ற இரண்டு லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்கு 4 கட்டுகள் கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்வதாகவும், பணம் கொண்டு வந்த பையை இருசக்கர வாகனத்தில் தொங்கவிட்டபடி சென்றதால், அது ஓட்டையாகி சாலையில் சிதறி இருக்கலாம் என்றார்.
மேலும் அங்குச் சிதறிக் கிடந்த 18 ஆயிரத்தைப் பொதுமக்கள் சேகரித்துக் கொடுத்தனர். இதில் பல ஆயிரங்கள் காற்றில் பறந்து இருக்கலாம் என அறிந்தவர்கள் தெரிவித்தனர். அதைக் கேட்ட அவர் யாருக்காவது பணம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சேகரித்துக் கொடுத்தவர்களைப் பார்த்து அப்பாவித்தனமாகக் கேட்டார். அவரிடம் எவ்வளவு பணம் குறைவாக இருக்கிறது எனக் கேட்டதற்கு இருக்கிற பணம் போதும் போன பணம் போய்விட்டு போகிறது யாரும் எதுவும் கேட்காதீர்கள் எனக் கூறினார். இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் பழைய ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்த கனரா வங்கியில் இறக்கிவிட்டுச் சென்றனர்.