வேலைநிறுத்தங்களால் நாட்டுக்கு வருமானம் வராவிட்டால் சம்பளம் வழங்க முடியாது – கலாநிதி பந்துல குணவர்தன

வேலைநிறுத்தம் காரணமாக நாட்டுக்கு வருமானம் கிடைக்காவிட்டால் சம்பளம் வழங்க முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் எவ்வாறாயினும் இன்று வழங்கப்படும் என திறைசேரி தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரி திணைக்களம், கலால் திணைக்களம், சுங்க திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பவற்றினூடாக நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தினூடாகவே அரச ஊழியர்களது சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

இவற்றினூடாக கிடைக்கும் வருமானம் கிடைக்காத பட்சத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு என்பவற்றை வழங்குவது சிரமம். இலங்கை மத்திய வங்கி கடந்த காலங்களில் ஒவ்வொரு அரசாங்கத்தின் கீழும் பணத்தை அச்சிட்டுள்ள போதிலும், தற்போது இலங்கை மத்திய வங்கி எக்காரணம் கொண்டும்; பணத்தை அச்சிட முடியாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன், இன்னுமொரு அரசாங்கம் வந்தாலும் இந்த முடிவை மாற்ற முடியாது. அந்த முடிவை மாற்றினால் முழு உலகமும் எமது நாட்டை கைவிட்டுவிடும். கொவிட் தொற்று பரவல் காலத்தில், நாடு முடக்கப்பட்டிருந்த காலத்திலும்கூட, வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருந்த ஊழியர்களுக்கும் அரசாங்கம் சம்பளம் மற்றும் மானியங்களை வழங்குவதற்கு பணத்தை அச்சிட்டதை நினைவு கூர்ந்த அமைச்சர், போராட்டக் குழுக்களுடன் தொடர்புடைய எந்தக் கட்சியும் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றாலும், இரண்டு வாரங்கள் கூட ஒரு நாட்டை ஆள முடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.