சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் ‘ஆருத்ரா கோல்டு டிரேடிங்’ என்ற பெயரில் ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிளைகளும் இருந்தன. ஆருத்ரா நிறுவனம் தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வரை வட்டி கிடைக்கும் என கூறியது. இதை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சுமார் 1,09,255 பேரிடம் ரூ.2,438 கோடி வரை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது, பொருளாதார குற்றப்பிரிவு. இந்த விவகாரத்தில் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும் இந்த விவகாரத்தில் பா.ஜ.க பிரமுகர்களும் சிக்கினர். அதாவது தமிழ்நாடு பா.ஜ.க விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்த ஹரீஷ் கைதும் செய்யப்பட்டார். இதேபோல் பா.ஜ.க பிரமுகரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷும் விசாரிக்கப்பட்டார். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சூழலில்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறது, ஆருத்ரா நிதி நிறுவனம். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ஊழலிலேயே திளைத்து, நிதி நிறுவனங்களை அவர்களுக்கு வேண்டிய ஆட்கள் மூலம் தங்கள் வசம் பயன்படுத்திக் கொள்வது, ஆசை வார்த்தை காட்டி ஏழை எளிய கிராமப்புற மக்களை ஏமாற்றுபவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதுதான் பாஜக. வெகுஜன மக்களை ஏமாற்றி, ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்து வந்தால், அவர்களுக்கு கட்சியிலே பொறுப்புகள் கொடுத்து, ஆதரித்து, தைரியம் கொடுப்பது, இதுதான் பா.ஜ.க-வின் சித்தாந்தமாகத் தமிழ்நாட்டில் உள்ளது.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் முதல் அறிக்கை பதிந்த பிறகும், பாஜக விளையாட்டுத்துறையில் அவர்களை விளையாட்டாகச் சேர்த்து, வெகுஜன மக்களின் விரோதத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுடைய அதிகாரமும், ஏமாற்றுப் பணமும் எதுவரை பாய்ந்திருக்கிறது என்றால், மத்திய அமைச்சரை சந்திக்கிறார்கள்; பிரதமருடைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இது எல்லாம் எதைக் காட்டுகிறது என்றால், ஏழை எளிய மக்களிடம் கொள்ளையடியுங்கள், ஏமாற்றுங்கள் நாங்கள் உங்களை காப்பாற்றுகிறோம் என உறுதி அளிப்பதாக உள்ளது” என கொதித்தார்.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் படுகொலை பக்கம் திரும்பியவர், “ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், இந்த தங்க நிறுவனத்தின் பெயர் அடிபடுகிறது. இதை மையப்படுத்தித்தான் புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
இதில் உள்ள தலையீடுகளை தீர விசாரிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் படுகொலை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்குமான எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மாயவதி சி.பி.ஐ விசாரணை கோருவது அவரது உரிமை. காவல்துறை இந்த வழக்கை ஒரே கோணத்தில் விசாரிக்காமல், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பல கோணங்களில் விசாரணை செய்ய வேண்டும். இனிமேலும், இதுபோன்ற படுகொலைகளை நடைபெறாமல் அரசு பாதுகாக்க வேண்டும். குற்றங்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாற வேண்டும். அதற்கு, புதிய ஆணையர் பல கோணங்களில் நேர்மையாக விசாரணையை நடத்த வேண்டும். தமிழ்நாடு அரசு சட்ட ஒழுங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்” என வெடித்தார்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து அறிந்துகொள்வதற்காக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், “ஆரம்பத்தில் ஆம்ஸ்ட்ராங் குத்துச் சண்டை பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேலும் தனது சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்காக குரலும் கொடுத்து வந்தார். இதையடுத்து பூவை மூர்த்தியின் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பில் இணைத்தார். பூவை மூர்த்தி மறைவுக்கு பிறகு அக்கட்சியில் இருந்து விலகி டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை துவங்கினார். பிறகு வட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனின் அறிமுகம் கிடைத்தது.
இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் மீது காவல் நிலையத்தில் பதியப்படும் வழக்குகளும் அதிகரித்தன. குறிப்பாக கடந்த 2008ல் சென்னை சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் ஆம்ஸ்ட்ராங்க்கு தொடர்பு இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. மறுப்பக்கம் அரசியல் ரீதியாக தனது செல்வாக்கை விசாலமாக்கி கொண்டார். 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 99வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது இமேஜை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்ற உத்தரவை பெற்று 2012ல் ரவுடி பட்டியலில் இருந்து வெளியில் வந்தார். இதனிடையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். மாநில தலைவர் பதவியையும் எட்டி பிடித்தார்.
மாயாவதியை சென்னைக்கு அழைத்து வந்து பெரிய பேரணி நடத்தினார். அதே காலக்கட்டத்தில் தனது நெருங்கிய நண்பனான புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ‘பாம்’ சரவணனின் சகோதரர் ரவுடி தென்னரசுவுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலர் பதவி கொடுத்தார். இந்த சூழலில்தான் ரவுடி தென்னரசுவுக்கும், மற்றொரு ரவுடியான ஆற்காடு சுரேஷுக்கும் யார் பெரியவன் என்பதில் உரசல் ஏற்பட்டது. ஆனால் ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணனும் இணைந்து தென்னரசுக்கு ஆதரவு கரம் நீட்டினர். இதில் ஆற்காடு சுரேஷுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. கடந்த 2015-ல் தென்னரசுவின் கதையை ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகள் முடித்தனர். இதில் ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணனும் கடும் கோபத்துக்கு சென்றார்கள். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது.
இந்த சூழலில்தான் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியும் கிளம்பியது. நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட சிலர் பணத்தை வாங்கித் தருமாறு ஆம்ஸ்ட்ராங்கை கேட்டிருக்கிறார்கள். அவரும் அதற்கான முயற்சியை எடுத்துள்ளார். மறுபக்கம் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆற்காடு சுரேஷ் களமிறங்கி உள்ளார். இதில் இருவருக்கும் இடையிலான பகை மேலும் கூர்மையடைந்தது. இந்த சூழலில்தான் கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.
இதை செய்தது ஒற்றைக்கண் ஜெயபால், அரக்கோணம் மோகன் உள்ளிட்ட கூலிப் படையினர்தான். அப்போது சம்பவ இடத்தில் பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங் ஒன்றாக இருந்ததாக ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு தரப்பு சொல்கிறது. இதையடுத்துதான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88