மும்பை: பிஎம்டபிள்யூ கார் விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷாவு மது அருந்திய மதுபான விடுதி புல்டோசரால் இடிக்கப்பட்டது.
மும்பை ஜூஹு தாரா சாலையில் உள்ள அந்த மதுபான விடுதி புதன்கிழமை இடிக்கப்பட்டது. முன்னதாக, இந்த மதுபான விடுதிக்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை சீல் வைத்ததைத் தொடர்ந்து இன்று மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. போலீஸாரின் கூற்றுப்படி, பிஎம்டபிள்யூ காரை அதிவேக வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, மிஹிர் ஷாவும் அவரது நண்பர்களும் சனிக்கிழமை இரவு இந்த மதுபான விடுதியில் தான் மது அருந்தியுள்ளனர்.
பிஎம்டபிள்யூ கார் விபத்து வழக்கு: மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்துள்ள அட்ரியா மால் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று அதிவேகமாக சென்றது. அந்த கார் முன்னால் சென்ற பைக் மீது மோதியதில் அதில் பயணம் செய்த தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். காவேரி நாக்வா (45) என்ற அந்த பெண் மட்டும் காரின் முன்பக்கத்தில் சிக்கிக் கொள்ள சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அதேநேரம் அவரின் கணவர் விபத்து பலத்த காயமடைந்தார். சூசன் ஹார்பரில் அந்த தம்பதி மீன்களை வாங்கிக் கொண்டு பைக்கில் திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.
விபத்துக்கு காரணமான பிஎம்டபிள்யூ கார் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜேஸ் ஷாவுக்கு சொந்தமானது என தெரியவந்தது. விபத்தின்போது அந்த காரில் அவரது மகன் மிஹிர் ஷா, ஓட்டுநரும் இருந்தனர். இந்த நிலையில் விபத்து நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் மிஹிர் ஷா செவ்வாய்க்கிழமை மும்பையின் விகார் என்ற பகுதியில் கைது செய்யப்பட்டார்.
மிஹிர் ஷா கைது: ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) இரவு 11 மணி அளவில் தனது தந்தைக்கு சொந்தமான பென்ஸ் காரில் அருகில் உள்ள மதுபான விடுதிக்கு பார்ட்டிக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் வீடு திரும்பிய மிஹிர் ஷா மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் மதுபோதையில் தனது டிரைவர் ராஜ்ரிஷி பிதாவத்தை அழைத்துக் கொண்டு மும்பை மரைன்ட்ரைவ் பகுதியில் டிரைவ் சென்றார்.
இந்த முறை பிஎம்டபிள்யூ காரில் சென்ற மிஹிர் ஷா அதிகாலை 5 மணி அளவில் மீண்டும் வீடு திரும்பினார். வீடு திரும்பும் வழியில் மும்பை வோர்லி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது பிஎம்டபிள்யூ கார் அதிவேகத்தில் மோதியது. விபத்துக்கு பின்னர் காரை டிரைவர் ராஜ்ரிஷி பிதாவத்திடம் இயக்க கொடுத்துவிட்டு மிஹிர் ஷா எதிர் சீட்டில் அமர்ந்துகொண்டுள்ளார். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மிஹிர் ஷாவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, “மிஹிர் ஷா மூன்று நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டிதன் அர்த்தம் என்ன?. அவர் குடித்திருக்கவில்லை என்றால் ஏன் தலைமறைவாக வேண்டும். சம்பவம் நடந்து இத்தனை தாமதமாக மிஹிர் ஷா கைது செய்யப்பட்டிருப்பதால், அவரின் ரத்தத்தில் மதுவின் தாக்கம் குறைந்திருக்கும்” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்தநிலையில், மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷாவை சிவசேனா துணைத் தலைவர் பதவியில் இருந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நீக்கியுள்ளார்.