டெல் அவில்: இஸ்ரேலிய ராணுவம் அனைத்து பாலஸ்தீன குடிமக்களையும் காசா நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 208 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கான் யூனிஸில் இடம்பெயர்ந்த குடிமக்கள் வசிக்கும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், புதன்கிழமை இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அக்டோபர் 7-ஆம் தேதி முதல் ஹமாஸ் போராளிகளில் 60 சதவீதத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,243 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 88,243 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
காசாவில் கடந்த நான்கு நாட்களில் நான்கு பள்ளிகள் தாக்கப்பட்டதாக காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைவர் பிலிப் லஸ்ஸாரினி கூறுகிறார். அதோடு அவர், உடனடியாக போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். முன்னதாக, காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியது. கான் யூனிஸ் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மறுபரிசீலனை செய்வதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
பள்ளிகளில் அடைக்கலம் தேடும் மக்கள் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், இச்சம்பவம் குறித்து விரைவான விசாரணை தேவை என ஜெர்மனி தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 208 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.