தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளத்தை செலுத்தாத பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுடன் அரசு செய்துள்ள காணிக் குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வதற்குத் தேவையான சட்டத்தை வகுப்பதற்கான செயன்முறையை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை செலுத்துவதற்கு ஒவ்வொரு பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளிடமுள்ள இயலுமையைத் தீர்மானிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக 09.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
23. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குதல் தொடர்பாக சில பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள்
வாழ்க்கைச் செலவு மற்றும் அண்மைக் காலத்தில் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி தோட்டத் தொழிலாளருக்கு நாளொன்றுக்கு செலுத்த வேண்டிய சம்பளத்தை மதிப்பீடு செய்யுமாறு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு 2024-05-22 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மேற்குறித்த சம்பளத்தை செலுத்துவதற்கு ஒவ்வொரு பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளிடமுள்ள இயலுமையைத் தீர்மானிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காகவும் குறித்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த குழுவின் விதந்துரைக்கமைய இயலுமை இருப்பினும், தமது தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளத்தை செலுத்தாத பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுடன் அரசு செய்துள்ள காணிக் குத்தகை உடன்படிக்கையை இரத்துச் செய்வதற்குத் தேவையான சட்டத்தை வகுப்பதற்கான செயன்முறையை துரிதப்படுத்துவதென அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.