Trisha: கமல், விஜய், அஜித், சிரஞ்சீவி என டாப் ஹீரோக்களின் படங்கள் – அசத்தும் த்ரிஷாவின் லைன் அப்!

சினிமாவில் 22 ஆண்டுகளைக் கடந்து ஹீரோயினாக சாதனை புரிந்து வருகிறார் த்ரிஷா. சமீபத்திய `லியோ’விற்கு பின் அவர் நடித்து வரும் படங்கள் அத்தனையுமே பெரிய பட்ஜெட் படங்கள். ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டு, ஹீரோக்களின் கதையிலும் ஸ்கோர் செய்து வருகிறார்.

விஸ்வம்பரா

இப்போது கமலுடன் ‘தக் லைஃப்’, விஜய்யின் ‘தி கோட்’, அஜித்துடன் ‘விடாமுயற்சி’, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் ‘ஐடென்டிட்டி’, சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ எனப் பெரிய லைன் அப்பை வைத்திருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பின் மணிரத்னத்துடனும் ‘தூங்காவனம்’ படத்திற்குப் பிறகு கமலுடனும் இணையும் படமாக ‘தக் லைஃப்’ இருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு செர்ஃபியாவைத் தொடர்ந்து பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருவதாக கோடம்பாக்கத்தில் பேச்சு உள்ளது. அதைப் போல இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் வரை இருப்பதால், ‘விடாமுயற்சி’யை முடித்துவிட்டு மீண்டும் இதன் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

மணிரத்னத்துடன் த்ரிஷா

‘லியோ’விற்கு பின் விஜய்யுடன் ‘தி கோட்’டில் கௌவரத் தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், த்ரிஷா டப்பிங் பேச வேண்டியது மீதம் உள்ளது. இதன் ரிலீஸ் வருகிற செப்டம்பர் என்பதால் த்ரிஷாவுக்கு இந்தாண்டில் வெளியாகும் முதல் படம் என்ற பெருமை ‘தி கோட்’டிற்குக் கிடைத்திருக்கிறது.

அஜித்துடன் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இப்போது ஆக்‌ஷன் காட்சிகளை ஷூட் செய்து வருகிறார்கள். அஜர்பைஜானைத் தொடர்ந்து புனேயில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. ‘விடாமுயற்சி’யில் கிடைத்த பிரேக்கில் அந்த கால்ஷீட்களை வீணடிக்காமல் மலையாளத்தில் டொவினோ தாமஸின் ‘ஐடென்டிட்டி’ படத்திற்குக் கொடுத்த த்ரிஷா, இப்போது அந்தப் படத்தையும் முடித்துவிட்டார்.

த்ரிஷா | Trisha

நீண்ட வருடத்திற்குப் பின் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’வில் நடித்து வருகிறார். இது சிரஞ்சிவியின் 156வது படமாகும். ஹைதராபாத்தில் பிரமாண்ட செட்கள் போட்டு இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிக உயரமான அனுமன் சிலை ஒன்றையும் செட் போட்டுள்ளனர். இந்த செட்டைக் காண, பவன் கல்யாணும் ஸ்பாட்டிற்கு வந்து வியந்தார். ‘விஸ்வம்பரா’வின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்துவிட்டே அஜர்பைஜான் சென்றிருக்கிறார் த்ரிஷா.

இவை மட்டுமல்லாமல் த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிருந்தா’ என்ற தெலுங்கு வெப்சீரிஸும் அடுத்த மாதம் சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது. க்ரைம் த்ரில்லரான இதில் த்ரிஷாவுடன் பிரித்விராஜின் சகோதரரான இந்திரஜித் சுகுமாரனும் நடித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.