விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நேர நிலவரப்படி 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக, காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. காலை 9 மணிநிலவரப்படி 13 சதவீதமாகவும், 11 மணிநேர நிலவரப்படி 30 சதவீதமாகவும், மதியம் ஒரு மணி நிலவரப்படி 50.95 சதவீதமாகவும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44 சதவீதமாகவும் இருந்தது.
77 வயது முதியவரின் வாக்கு – கப்பியாம்புலியூர் வாக்குச் சாவடியில், 77 வயது முதியவரின் வாக்கை 15 வயது சிறுவன் செலுத்தியதாக பாமகவினர் வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் அளித்தார். அதற்கு வாக்குச் சாவடி அலுவலர், அப்படியான சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும், புகார்தாரரின் பெயரில் யாரும் வாக்களிக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இதனால், சுமார் 30 நிமிட தாமதத்துக்குப் பின்னர், அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 6 மணிக்குப் பிறகு வாக்களிக்க வந்தவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
பணப்பட்டுவாடா புகார்: இதேபோல், பனையூர் வாக்குச்சாவடியில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு திமுக பிரமுகர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுவதாக கூறப்பட்டது. இதைத் தட்டிக்கேட்ட பாமகவினர் அங்கு தகராறில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு காவல் துறையினர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்படுத்தினர்.
முன்னதாக, காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர். குறிப்பாக வயது முதிர்ந்தோர் சக்கர நாற்காலியில் வந்து தங்கள் வாக்கினை செலுத்தியதை பல வாக்குச் சாவடிகளில் காண முடிந்தது. 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 42 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காலை 7.10 மணிக்கு அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 42-வது வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது மனைவி வனிதா, தந்தை அரிபுத்திரியுடன் வந்து வாக்களித்தார். பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி காலை 9.10 மணிக்கு வாக்களித்தார். மிகவும் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களாக அடையாளம் காணப்பட்ட ராதாபுரம், குண்டலப்புலியூர், பனையபுரம் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.