விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட வழக்கில், மேல்முறையீடு செய்த இஸ்லாமிய கணவரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்து, எந்த மதத்தவராக இருந்தாலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, தெலங்கானாவைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் என்பவருக்கு, விவாகரத்தான மனைவிக்கு மாதம் ரூ.20,000 ஜீவனாம்சம் வழங்குமாறு குடும்பநல நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்த முகமது அப்துல் சமத், தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கேயும், ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பதை உறுதிசெய்த உயர் நீதிமன்றம், அதன் தொகையை ரூ.10,000-ஆக குறைத்தது.
இந்த உத்தரவையும் எதிர்த்த முகமது அப்துல் சமத், இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986-ஐ முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில், இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 ஆனது, இஸ்லாமிய பெண் விவாகரத்து பெற்ற பிறகு இத்தாத்தின் போது மட்டும் (90 நாள்கள்) ஜீவனாம்சம் பெற முடியும்.
இதனை, இந்த சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியை 2001-ல் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், `விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மறுமணம் செய்துகொள்ளும் வரை அல்லது அவர் தன்னைதானே பார்த்துக்கொள்ளும் நிலைவரை அவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டிய ஆணின் கடமை நீட்டிக்கப்பட்டிருக்கிறது’ என்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில், முகமது அப்துல் சமத்தின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, “குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். அதன்படி, ஜீவனாம்சம் கூறுபவர் எந்த மதத்தவராக இருந்தாலும், அனைத்து பெண்களுக்கும் இது பொருந்தும். இதில், ஜீவனாம்சம் என்பது அவர்களுக்குத் தொண்டு செய்வது அல்ல. இது திருமணமான ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை உரிமை. இந்த உரிமையானது மத எல்லைகளைக் கடந்து, அனைத்து திருமணமான பெண்களுக்கும் பாலின சமத்துவம் மற்றும் நிதிப் பாதுகாப்பு கொள்கையை வலுப்படுத்துகிறது.
இல்லத்தரசிகளான மனைவிகள் உணர்வு மற்றும் பிற வழிகளில் தங்களை சார்ந்திருப்பதை சில கணவர்கள் உணரவில்லை. குடும்பத்துக்காக இல்லத்தரசிகள் செய்த இன்றியமையாத செயல்களையும், தியாகங்களையும் இந்திய ஆண்கள் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்ற தேசிய மகளிர் ஆணையம், “உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு, அனைத்து பெண்களுக்கும் பாலின சமத்துவம் மற்றும் நீதிக்கான ஒரு குறிப்பிடத்தக்க படி” என்று தெரிவித்திருக்கிறது.