“என் மீதும், என் கட்சி மீதும் இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்” – பிரதமர் மோடி @ ஆஸ்திரியா 

வியன்னா: “கரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில், உலக அரசியலில் ஒரு ஸ்திரமின்மை நிலவியது. இது போன்ற ஒரு சூழலில், இந்திய மக்கள் என் மீதும், என் கட்சி மீதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர்” என்று ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “இந்தியாவில் நடந்த தேர்தல், உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன் நடந்த இந்திய பொதுத் தேர்தலில் 650 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பெரிய தேர்தல் நடந்தும், சில மணி நேரங்களுக்குள் தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

இதுதான் எங்கள் தேர்தல் அமைப்பு மற்றும் எங்கள் ஜனநாயகத்தின் பலம். இந்தியாவில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். பன்முகத்தன்மை கொண்ட இந்த போட்டிக்குப் பிறகுதான் மக்கள் தங்கள் ஆணையை வழங்கினர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறை இந்தியாவில் ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளது.



கரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில், உலக அரசியலில் ஒரு ஸ்திரமின்மை நிலவியது. இது போன்ற ஒரு சூழலில், இந்திய மக்கள் என் மீதும், என் கட்சி மீதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியா ஸ்திரத்தன்மையையும் தொடர்ச்சியையும் விரும்புகிறது என்பதற்கு இந்த தேர்தல் முடிவுகளே சான்றாகும்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இதையடுத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.