“இதையெல்லாம் செய்தால் பால் உற்பத்தியை அதிகரிக்கலாம்'' – வழிகாட்டிய நிகழ்ச்சி!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியும்,  இந்திய பால் சங்கமும் இணைந்து உலக பால் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், மெய்யூர் கிராமத்தில்  கால்நடை சுகாதார முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மெய்யூர் மக்களின் கால்நடைகளுக்கு இலவசமாக மருந்து மட்டும் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ந.குமாரவேலு பேசியபோது,

தடுப்பூசி

“ஒரு நாளின் தொடக்கம் பாலிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. பால் ஓர் உன்னதமான உணவுப் பொருள். இதைப் போற்றும் வகையில், 2021 முதல் பாலின் நன்மைகளைப் பற்றி பேசும் நாளாகவும், கறவை மாடுகள் வளர்ப்பவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஓர் அங்கமாக  சுத்தமான பாலை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற குறும்படத்தை உங்களுக்கு காணொளி வாயிலாக காட்சிபடுத்தப் போகிறோம். அதோடு, சிறந்த கறவை மாடு மற்றும் பசுவைத் தேர்ந்தெடுத்து பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

அறிவியல் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆடு, மாடு வளர்ப்பு என்பது தொன்று தொட்டு முன்னோர்கள் செய்து வருவதுதான். ஆனால், அதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவியல் ரீதியாக வளர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். மாடுகளை கட்டி வைக்கும் இடமாக இருந்தாலும் சரி, பால் கறக்கும் பாத்திரங்களாக இருந்தாலும் சரி சுத்தமாக இருக்க வேண்டும். கறந்த பாலை அப்படியே விற்பனை செய்தால் 1 லிட்டருக்கு 35-40 ரூபாய்தான் கிடைக்கும். அதையே நெய், பனீர், கோவா, க்ரீம் எடுத்தல் என்று மதிப்புக்கூட்டினால் லிட்டருக்கு 60-70 ரூபாய் கிடைக்கும். இந்த மதிப்புக்கூட்டல் என்பது ஏதோ பெரிய விஷயம் என்று நினைக்காதீர்கள். மிகவும் எளிமையான விஷயங்கள்தான். அதற்கு எங்கள் கல்லூரி சார்பில் பயிற்சி அளித்து வழிகாட்டுகிறோம். கொஞ்சம் தொழில்நுட்பமும், உழைப்பும் செலுத்தினால் போதும். மதிப்புக்கூட்டல் எளிதானதுதான்.

நிகழ்வில் பேசும் குமாரவேலு

தற்போதைய நிலையில் பலருக்கும் பால் உற்பத்தியை எப்படி பெருக்குவது என்கிற கேள்வி இருக்கும். இதற்கு கால்நடைகளுக்கு சமச்சீரான  தீவனம் கொடுக்க வேண்டும். அடர்தீவனம், பசுந்தீவனம், தண்ணீர் என ஒருநாளைக்கு ஒரு மாட்டுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அதை தகுந்த இடைவெளியில் கொடுக்க வேண்டும்.

இன்றைய காலத்தில் காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைகிறது. அதனால் மாடுகளுக்கு போதுமான நிழல், குடிநீரை உறுதி செய்ய வேண்டும். நோய்களைத் தடுப்பதுதான் கால்நடை வளர்ப்பில்  மிகவும் முக்கியமான ஒன்று. அந்தந்தப் பருவத்திற்கு ஏற்ப கால்நடை மருத்துவரை அணுகி உரிய தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். நாம் மாடுகளை சரியாக பராமரித்தாலே அவை நன்றாக பால் கொடுக்கும். புதிதாக மாட்டுப் பண்ணை தொடங்க இருப்பவர்கள் நல்ல கறவைத் திறன் கொண்ட மாடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்” என்றார்.

முகாமில்

நிகழ்ச்சியில் மாடுகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகள் போடப்பட்டன. மேலும் சிறந்த பசு மற்றும் கன்றுக்கு பரிசு வழங்கப்பட்டது. உலக பால் தினத்தை ஒட்டி, பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய பால் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் கண்ணா, தொலைதூர கல்வி இயக்குனர் டாக்டர். அனில்குமார், சென்னை ஆவின் பொது மேலாளர் டாக்டர். பாலபூபதி மற்றும் மெய்யூர் ஊர்த்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.