இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் `இந்தியன் 2′ திரைப்படம் குறித்தான பேச்சுதான் எங்கும்!
கடந்த சனிக்கிழமை இந்தியன் 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகர் கமல் ஹாசன், “இந்தப் படத்திற்குத் தடங்கல்கள் வந்தன. படப்பிடிப்பின்போது விபத்து நிகழ்ந்தது. கொரோனா பெருந்தொற்று பரவியது. உடன் நடித்த நடிகர்களை அடுத்த நாள் சந்திக்க முடியாமல் போனது. இத்தனை நிகழ்வுகள் எனக்கு ஒரே திரைப்படத்தில் நிகழ்ந்தன எனக் கூறினால் அது மிகையாகாது” எனக் கூறியிருந்தார்.
இவர் சொல்வதைப் போலப் பல நீண்ட நெடிய பயணத்திற்குப் பிறகு ‘இந்தியன் 2’ திரைப்படம் வருகிற ஜூலை 12-ம் தேதி (நாளை) வெளியாகிறது.
இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 1996-ம் வெளியாகியது. இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ‘இதற்கு இரண்டாம் பாகத்தை எடுப்போம்’ என இயக்குநர் ஷங்கர் யோசிக்கவே இல்லையாம். அதன் பிறகு 2.0 திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கான யோசனை இவருக்குக் கிடைத்திருக்கிறது.
2017-ல் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘இந்தியன் 2’ திரைப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார். அறிவிப்பு வெளியான சமயத்தில் இத்திரைப்படத்தை தில் ராஜுவின் ஶ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் விலகிய பிறகு லைகா நிறுவனம் முன் வந்து இத்திரைப்படத்தைத் தயாரித்தது.
இப்போது நிலவும் சூழலுக்கு இந்தியன் தாத்தா வருகை தந்தால் எப்படி இருக்கும் என்பதை வைத்துத்தான் இந்த இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. 2019-ம் ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் வரை நடைபெற்றது. ஆனால், இந்த ஐந்து வருடக் காலத்தில் ‘இந்தியன் -3’ திரைப்படத்தையும் சேர்த்து முடித்திருக்கிறார் ஷங்கர்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி இந்தப் படப்பிடிப்பு தளத்தில் ஒரு விபத்து நிகழ்ந்தது. அந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். இப்படியான துயர சம்பவத்திலிருந்து படக்குழு மீண்டு வருவதற்குள் கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியது. கொரோனா தொற்று பரவத் தொடங்கியதால் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தடைப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டால் கண்டினியூட்டி போன்ற பல சவால்கள் படக்குழுவிற்கு வந்தமையும்.
இப்படியான சம்பவங்களைத் தாண்டி இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் சிலர் படப்பிடிப்பு முடிவதற்கு முன் உயிரிழந்தார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் விவேக், நடிகர் நெடுமுடி வேணு, நடிகர் மனோபாலா ஆகியோர் நடித்திருக்கிறார். ஆனால், படப்பிடிப்பு முடிவதற்குள் இந்த மூவரும் மறைந்தது படக்குழுவோடு சேர்த்து, திரைத்துறையையும் கவலையில் ஆழ்த்தியது. இவர்களை வைத்து எடுக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகள், டப்பிங் எனப் பல விஷயங்கள் படக்குழுவுக்குச் சவாலை உருவாக்கியிருக்கும். மேலும், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு லைகா நிறுவனம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்தது.
பெரும்பாலும் ஷங்கர் திரைப்படங்களுக்கு ஏ. ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பார். இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கும் ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். ஆனால் முதல் முறையாக அனிருத்துடன் இத்திரைப்படத்திற்குக் கூட்டணி அமைத்திருக்கிறார் ஷங்கர். இதற்கான காரணத்தையும் ஷங்கர் விளக்கியிருக்கிறார்.
அவர், “இந்தப் படத்துக்கான வேலையைத் தொடங்கும்போது ரஹ்மான் 2.0 திரைப்படத்தின் பின்னணி இசை வேலைகளில் மும்முரமாக இருந்தார். அதனால் அவருக்கு இன்னும் பணிச் சுமையைக் கொடுக்க வேண்டாம் என இந்தப் படத்துக்கு அனிருத்துடன் இணைந்தேன்” என விளக்கமளித்திருந்தார். இதுமட்டுமின்றி இத்திரைப்படத்தைத் தொடங்கும் வேளையில் மூன்றாம் பாகத்தைச் சேர்த்து எடுக்க வேண்டும் என்ற எந்தத் திட்டமும் இயக்குநர் ஷங்கருக்கு இல்லை. குறிப்பாக, இரண்டாம் பாகத்திற்கான புட்டேஜ்களை 6 மணி நேரத்திற்கு எடுத்திருக்கிறார். இதனைச் சுருக்கினால் காட்சிகளின் தன்மை வலுவிழந்துவிடும் என எண்ணி மூன்றாம் பாகத்திற்கும் ஷங்கர் அதன் பின் திட்டமிட்டிருக்கிறார்.
இப்படியான பயணத்தைத் தாண்டி இந்தியன் தாத்தா 2கே கிட்ஸுக்கும் பரிச்சயமாகத் திரையரங்குகளுக்கு வருகிறார்!
தாத்தா வர்றாரு!