பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூருநகர மேம்பாட்டு கழகம் கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதையடுத்து பார்வதிக்கு மைசூரு மாநகருக்குட்பட்ட பகுதியில் மாற்று நிலம்ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்தது.
கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்ஆர். அசோகா, ‘‘இந்த விவகாரத்தில் முதல்வர் சித்தராமையாவின் தலையீடு காரணமாகவே அதிக விலை கொண்ட மாற்று நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் விதிமுறை மீறலும், பல கோடி ரூபாய்ஊழலும் நடந்துள்ளது. சித்தராமையாவுக்கு நேரடி தொடர்பு இருப்பதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையடுத்து மைசூரு ஆட்சியராக இருந்த கே.வி.ராஜேந்திரா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை விசாரிக்க கர்நாடக நகரமேம்பாட்டுத்துறை அதன் ஆணையர் வெங்கடாசலபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. கர்நாடக பாஜக தலைவர்விஜயேந்திரா, ‘‘இந்த விவகா ரத்தில் சித்தராமையா நேரடியாக தலையிட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அதனை விசாரணை குழுவினரிடம் ஒப்படைக்க இருக்கிறேன்”என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மைசூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்நேகாமயி கிருஷ்ணா, மைசூரு மாநகர காவல் ஆணையரிடம் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘‘மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து போலீஸார் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜூனிடம் விசாரிக்க வேண்டும்”என கோரியுள்ளார். கர்நாடக ஆளுநர், முதன்மை செயலர், மைசூரு ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை சித்தராமையா மறுத்துள்ளார்.