நீட் வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசியவில்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்!

புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு 2024 (நீட்) வினாத்தாள் கசிவு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. அது சமூக ஊடகங்களில் பரவவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) மூடி முத்திரையிடப்பட்ட தனது நிலை அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் வினாத்தாள் கசிவு பிஹாரின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதனால் சில மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு சமூக ஊடகங்களில் பரப்பப்படவில்லை எனக் கூறியிருப்பதாக தெரிகிறது.

வினாத்தாள் கசிவின் பரவல் மற்றும் தேர்வில் அதன் தாக்கம் பற்றிய சிபிஐ-ன் விசாரணைஒரு தெளிவை வழங்கும். சிபிஐ அறிக்கை, முழு நீட் தேர்வையும் திரும்பவும் நடத்த வேண்டாம் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. முன்னதாக, கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை 23 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது..



மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தனது பிரமாண பத்திரத்தில், நீட் தேர்வில் பரந்த அளவில் முறைகேடுகள் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரிவித்திருந்தது. மேலும் நீட் யு.ஜி. – 2024 தேர்வு முடிவுகள் குறித்து ஐஐடி – மெட்ராஸின் தரவு பகுப்பாய்வுகள் மேற்கோள் காட்டி, நீட் தேர்வில் சில குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற வழிவகுப்பதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.

தரவுகளை பகுப்பாய்வு செய்து சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்ட மாணவர்களை பாதிக்கப்படாத மாணவர்களிடம் இருந்து பிரித்துப் பார்க்கவும் ஏதாவது சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் கேட்டதைத் தொடர்ந்து இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே தகுதித் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை தனியாக தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், “சமூக ஊடக செயலியான டெலிகிராமில் வெளியான வினாத்தாள் போலியானவை. தேசிய, மாநில, நகர மற்றும் தேர்வு மைய அளவில் நீட் தேர்வு மதிப்பெண்கள் குறித்து ஒரு பகுப்பாய்வு நடந்தப்பட்டது. அந்தப் பகுப்பாய்வில், தேர்வுகளில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் இயல்பானதே. மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் புறக்காரணிகள் ஆதிக்கம் எதுவும் இல்லை” எனத் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.