வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலனில் சில சிக்கல்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்து பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது. ஆனால், அவர்கள் சுமார் 27 மணி நேரம் பயணித்து விண்வெளி நிலையத்தை அடைந்தார்கள்.
ஒரு வார காலத்துக்குப் பின் ஜூன் 14 அன்று அவர்கள் பூமி திரும்பி இருந்தனர். ஆனால், ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்ற காரணங்களால் அது ஒரு மாத காலத்தை தற்போது கடந்துள்ளது. இந்த விண்கலத்தில் பயணித்த முதல் இருவர் என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத இறுதியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் தகவல்.
“இந்த விண்கலன் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருமென மனதளவில் நான் முழுமையாக நம்புகிறேன். அதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. தோல்வி என்பது ஆப்ஷன் அல்ல. அதனால் தான் நாங்கள் இப்போது இங்கே தங்கி உள்ளோம். நாங்கள் பூமி திரும்புவதற்கான பணிகள் நடைபெறுகிறது” என சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இதனை புதன்கிழமை அவர் பகிர்ந்தார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் விண்வெளியில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருவது தொடர்பாக எதுவும் பேசவில்லை என நாசா தெரிவித்துள்ளது.