பெரும்பாலனவர்களுக்கு, துணி துவைப்பது என்பது வாஷிங்மெஷின் என்ற இயந்திரத்தை சார்ந்ததாகிவிட்டது. பல்வேறு வகையிலான வாஷிங்மெஷின்கள் வந்தாலும், செமி, ஃபுள்ளி ஆடோமெடிக் என இரு வகை சலவை இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மடிக்கக்கூடிய வாஷிங்மெஷின்களும், சூட்கேஸைப் போல வெளியில் எடுத்துச் செல்லும் வாஷிங்மெஷின்களும் வந்துவிட்டன.
ஒருவருடைய துணியை மட்டும் துவைக்க, ஓரிரு துணிகளை துவைக்க என இந்த குட்டி சலவை இயந்திரங்கள் இன்று பிரபலமாவதற்கு காரணம் அதன் குறைந்தவிலை, தண்ணீர் பயன்பாடு குறைவு என்பதுடன், சுலபமாக கையாளக்கூடியது என்பதும், எங்கு வேண்டுமானாலும் வைத்து துணியை துவைத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லலாம்.
இந்த போர்ட்டபிள் வாஷிங்மெஷின்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் பல்வேறு பிராண்ட்களில் கிடைக்கின்றான. கையடக்க சலவை இயந்திரங்கள் 3 கிலோ வரையிலான துணிகளை துவைக்கக்கூடியவை. 5 முதல் 6 துணிகளை ஒரே நேரத்தில் துவைக்கும் வசதி கொண்ட இந்த குட்டி வாஷிங் மெஷின்களில் டிரையரும் இருக்கிறது.
வாளி அதாவது பக்கெட் அளவில் இருக்கும் இந்த போர்ட்டபிள் வாஷிங்மெஷின் அழுக்குத் துணிகளை நிமிடங்களில் துவைத்துக் கொடுத்து விடுகிறது. சிறுவர்கள் முதல், வயதானவர்கள் வரை அனைவரும் இந்த வாஷிங்மெஷினை சுலபமாக இயக்கலாம்.
வழக்கமான வாஷிங்மெஷினைப் போலவே இருக்கும் இந்த பக்கெட் வாஷிங்மெஷின் மின்சாரத்தில் இயங்குவது. வீட்டில் எங்கே வேண்டுமானாலும் வைத்து இந்த சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். வாளி போல் இருக்கும் இந்த மெஷினில் உள்ள மின்சார வொயரை, மின்சாரத்துடன் இணைத்து வழக்கமான வாஷிங்மெஷினைப் போலவே இயக்கலாம்.
விலையோ மிகக்குறைவு
போர்ட்டபிள் வாஷிங் மெஷின் 5 முதல் 8 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இ-காமர்ஸ் இணையதளங்களில் சலுகை விலையில் கிடைக்கும் இந்த வாஷிங் மெஷினை வெறும் 4 ஆயிரத்திலும் வாங்கிவிடலாம். கடைகளுக்குச் சென்றால் பேரம் பேசி விலையைக் குறைத்துக் கொள்ளலாம்.
சுற்றுலாவில் வாஷிங்மெஷின்
வீட்டில் மட்டுமின்றி பயணங்களின் போதும் எடுத்து செல்லும் அளவு சிறியதாக இருப்பதால், போர்டபிள் வாஷிங்மெஷினை சுற்றுலா செல்லும்போதும் எடுத்துச் செல்லலாம். சாக்ஸ், உள்ளாடைகள், தலையணை கவர்கள் போன்ற சிறிய துணிகளை நிமிடங்களில் துவைத்து சுத்தமாக்கி கொடுத்துவிடும்.
பட்ஜெட் வாஷிங்மெஷின்
வீட்டிற்கு வாஷிங்மெஷின் வாங்க வேண்டும், ஆனால் பணம் அதிகமாக செலவழிக்கமுடியாது என்று நினைப்பவர்களும் இந்த வாஷிங்மெஷினை வாங்கி பயன்படுத்தலாம்.
தண்ணீர் பயன்பாடு
தானியங்கி சலவை இயந்திரங்கள், ஃபுல் ஆட்டோமெடிக் அல்லது செமி ஆடோமெடிக் என எதுவாக இருந்தாலும், அதில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. தண்ணீரின் அளவு என்பது இயந்திரத்தின் குறிப்பிட்ட மாதிரி மற்றும் திறனைப் பொறுத்து மாறுபடும்.
இருந்தபோதிலும், தோராயமாக ஒரு சலவைக்கு ஒவ்வொரு வகை சலவை இயந்திரம் எவ்வளவு தண்ணீரை செலவு செய்கின்றன என்பதைத் தெரிந்துக் கொள்வோம். ஃபுல் ஆட்டோமெடிக் இயந்திரம், செமி இயந்திரத்தை விட தண்ணீரை குறைவாகவே பயன்படுத்தும். முழு தானியங்கி சலவை இயந்திரம் ஒரு முறை துவைக்க பயன்படுத்தும் தண்ணீர்,110 முதல் 150 லிட்டர்கள், இது தோராயமான அளவு.
இதுவே, செமி வாஷிங் மெஷினாக இருந்தால், சலவை இயந்திரம்: முழு தானியங்கி இயந்திரங்களுடன் ஒப்பிடும்போது, அரை தானியங்கி சலவை இயந்திரங்கள் பொதுவாக அதிக தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. இதில் ஒருமுறை துணி துவைக்க 150 முதல் 230 லிட்டர் தண்ணீர் செலவாகும்.
அதிலும், வாஷிங்மெஷின் பெரியதாக இருந்தாலும், அதில் சில துணிகளை மட்டுமே போடும்போதும் அதிக தண்ணீர் செலவாகும். எனவே, இயந்திரத்தின் விலையும் குறைவு, தண்ணீர் செலவும் குறைவு, மின்சார நுகர்வும் குறைவு என பல அம்சங்களில் போர்டபிள் வாஷிங் மெஷின்கள், பட்ஜெட் வாஷிங்மெஷின்களாக அனைவரும் பயன்படுத்தும் விதமாக இருக்கின்றன.