பொதுச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட கதாபாத்திரங்களையெல்லாம் கதையின் நாயகன் – நாயகி ஆக்கிய புரட்சி ’பிதாமகன்’ இயக்குநர் பாலாவின் பிறந்தநாள் இன்று.
முதல் படத்திலேயே தேசிய விருதைக் கரம் பிடித்தவர். ஷூட்டிங்கில் கடுமையாக இருப்பார் என்ற மிரளவைக்கும் பெயர் இருந்தாலும் இவரது படத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என நாயக, நாயகிகளைத் தவிக்கவைத்துவிடும் இயக்க அசுரன். அவரது முதல் படமான ‘சேது’வில் நாயகியாக நடித்த அபிதாவிடம், பாலா குறித்தும் ’சேது’ நினைவுகள் குறித்தும் கேட்டோம்.
“‘சேது’ படம் இவ்ளோ பெரிய வெற்றியை கொடுக்கும்னு யாருமே நினைச்சுக்கூட பார்க்கல. அந்தப் படத்துல நடிக்கும்போது எனக்கு டீன் ஏஜ்தான். படத்துக்கு ஒரு புதுமுகம் தேவைன்னு பாலா சார் தேடிக்கிட்டிருந்திருக்காரு. கதாபாத்திரத்துக்கு ஏற்ற ஃபேஸ் இருக்க மாதிரி நிறைய பேரை ஆடிஷன் பண்ணிப் பார்த்திருக்காரு. என் போட்டோவைப் பார்த்துட்டு ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. டயலாக் எல்லாம் பேச வெச்சு நிறைய போட்டோஸ்லாம் எடுத்தாங்க. நான் அப்பவே சீரியல்ல நடிச்சிட்டிருந்தேன்.
இன்னொரு படத்துலயும் செகண்ட் ஹீரோயினா கமிட் ஆகியிருந்தேன். ஆனா, அவர் புதுமுகம்தான் தேவைன்னு தேடிக்கிட்டிருந்தார். நான் நடிச்சுக்கிட்டிருக்கேன் என்கிற உண்மையை சொல்லிட்டேன். ஒரு மாசத்துக்கு எந்த அழைப்புமே பாலா சார் ஆபீஸ்லேர்ந்து வர்ல.
‘தேவதை’ படத்துல நடிச்ச கீர்த்தி ரெட்டியை ’சேது’ படத்து ஹீரோயினா செலக்ட் பண்ணிட்டாங்கன்னு தெரியவந்தது. ஒரு வாரம் ஷூட்டிங்கெல்லாம் போயிருக்கு. அதுக்கப்புறம் ஏதோ காரணத்தால அவங்க நடிக்கல. அதுக்கப்புறம் என்னைத் திரும்பவும் கூப்பிட்டாங்க.
‘யாருமே செட் ஆகல, நீங்கதான் நடிக்கணும்’னு அக்ரிமெண்ட்ல சைன் எல்லாம் வாங்கிக்கிட்டாங்க. ஓகே சொல்லி ஷூட்டிங் ஆரம்பிச்சது. நான் அப்போ புதுமுகம். பாலா சாரும் புதுமுகம், விக்ரம் சாரும் அப்போ பெரிய நடிகர் இல்ல. வெற்றியைக் கொடுக்கணும்னு ரொம்ப சின்சியரா ஒர்க் பண்ணினோம். படம் எல்லாம் முடிஞ்ச பிறகு விநியோகஸ்தர்களுக்கு பிரிவ்யூ ஷோ போட்டுக் காண்பிச்சாங்க. க்ளைமாக்ஸைப் பார்த்து பலரும் கிண்டல் பண்ணாங்க.
ஹீரோ மெண்டல் ஆகிடுவாரு, ஹீரோயின் செத்துடும்னா யாரும் படம் பார்க்க வர மாட்டாங்க, அதனால ரெண்டு பேரும் சேர்ற மாதிரி க்ளைமாக்ஸை மாற்றுங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா, பாலா சாரோ இந்தக் கதைக்கு இப்படி வெச்சாத்தான் சரியா இருக்கும்னு தைரியமா, உறுதியா நின்னாரு. படம் ரிலீஸ் ஆகலைன்னாலும் பரவாயில்ல. இந்த க்ளைமாக்ஸுதான் அப்படின்னு ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருந்தார். அதே மாதிரி மக்கள் அந்த க்ளைமாக்ஸை ஏற்றுக்கிட்டாங்க.
என்னைக் கடத்திக்கிட்டு போற சீன், காலேஜ் போகும்போது என் பேரைக் கேக்குற சீன் எல்லாமே அந்தப் படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச சீன்கள்” என்று மனம் நெகிழ்ந்து பேசியவரிடம், ”பாலா சார் ஷூட்டிங்குல ரொம்ப அதிரடியா இருப்பாரு, கடுமையா நடந்துப்பார்ன்னு சொல்வாங்களே… அது உண்மையா? படம் வெளியாகி இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன, அவரிடம் எப்போது பேசினீர்கள்?” என்று கேட்டபோது,
“பாலா சார்க்கு ஷூட்டிங் ஸ்பாட்டுல கொஞ்சம் கோவம் வரும், உண்மைதான். அறிமுகப் பாடலுக்கான ஷூட்டிங்கின்போது, சில ஸ்டெப்ஸ் எனக்கு சரியா வரல. அதனால பாலா சார் கோவப்பட்டு, ‘உன்னை போயி ஹீரோயினா நடிக்க வெச்சேன் பாரு. என்னை செருப்பாலேயே அடிச்சுக்கணும்’னு அவமானப்படுத்துற மாதிரி திட்டிட்டார். எனக்கு ரொம்ப அசிங்கமாகிடுச்சு.
எல்லார் முன்னாடியும் இப்படித் திட்டிட்டாரேன்னு செம்ம கடுப்பாகிட்டேன். ஷூட்டிங்கே வேணாம்னு அழுதுக்கிட்டு அம்மாக்கிட்ட சொல்லிட்டேன். ‘நான் சான்ஸ் கேட்கல. அவங்களாதான் கூப்பிட்டாங்க. டயலாக்கும் நல்லபடியா பேசினேன். எனக்கு இந்தப் படமே வேணாம்மா… நான் சரியாதானே நடிக்கிறேன். இப்படித் திட்டுறாரே’ன்னு அம்மாக்கிட்ட அழுதுக்கிட்டே சொன்னேன். ஒரு பக்கம் எங்கம்மா அழுவுறாங்க, இன்னொரு பக்கம் நான் அழுவுறேன். எங்க அக்காக்கிட்ட சொன்னப்போ, ’உன் நல்லதுக்குதானே சொல்லியிருப்பாரு. அவர்கிட்ட சாரி கேளு’ன்னு சொன்னாங்க.
நானும் மறுநாள் போயி பாலா சார்க்கிட்ட சாரி கேட்டேன். ’நீ நல்ல நடிகையா வரணும்னுதானே கோவப்பட்டேன். உன் நல்லதுக்குதானே சொன்னேன். காட்சி நல்லா வந்தா படம் நல்லா ஹிட் ஆகும். உன் குடும்பத்தை நல்லா பார்த்துக்கலாம்னுதானே கோவப்பட்டேன்’னு என் அக்கா சொன்ன மாதிரியே சொன்னார். அப்புறம், கேஷுவல் ஆகி ஷூட்டிங் நல்லபடியா போச்சு.
அப்புறம் ஒவ்வொரு ஷெட்யூல் முடிச்சபிறகும் பாலா சார் டீம் அந்தக் காட்சிகளைப் பார்த்துட்டு வருவாங்க. என்னைக் கடத்திட்டு போற காட்சியெல்லாம் எப்படி சார் வந்திருக்குன்னு கேட்டேன். ’அய்யோ… சாவித்ரியே தோற்றுடுவாங்க’ன்னு சொல்லிப் பாராட்டினார். அந்தப் பாராட்டை எல்லாம் என்னால மறக்கவே முடியாது. படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றதும் அவார்டு ஃபங்ஷனுக்கு எல்லாம் ஒண்ணாதான் போனோம். அதுக்கப்புறம், இப்போ வரைக்கும் அவரைப் பார்க்கவும் இல்ல. பேசவும் இல்ல. 2009-ல் எனக்கு மேரேஜ் ஆச்சு. நான் போயி பத்திரிகை வெச்சேன். ’எங்க வைக்கிறீங்க மேரேஜ்? எங்க ரிசப்ஷன்’னு கேட்டார். ’கேரளாவுல மேரேஜ், சென்னையில ரிசப்ஷன்’னு சொன்னேன். கண்டிப்பா வர்றேன்னு சொன்னார். ஆனா அவரோட பிஸி ஷெட்யூலால அவரால வரமுடியல. அதுக்கப்புறம் அவர்கிட்ட நான் பேசலை.
பாலா சார் காட்சிகள் நல்லா வரணும்னு ரொம்ப சின்சியரா உழைப்பார். இந்த மாதிரி வரணும், அந்த மாதிரி வரணும்னு நடிப்பைச் சொல்லிக்கொடுப்பார். அவரை எல்லோரும் கோவக்காரர்ன்னு சொல்லுவாங்க. ஆனா, அவருக்கு இன்னொரு முகமும் இருக்கு. காமெடி பண்ணினார்ன்னா அப்படிச் சிரிச்சுக்கிட்டு கிடப்போம். நாசூக்கா டார்க் காமெடியா பண்ணுவார். யோசிச்சு யோசிச்சு சிரிச்சுக்கிட்டு கிடப்போம்.
ரொம்ப பேச மாட்டார். அவர் கரெக்ட் டைமுக்கு எங்களுக்கு முன்னாடி வந்து நடிப்பு சொல்லி கொடுத்துக்கிட்டு இருப்பார். அதனாலதான், அவர் பெரிய இயக்குநரா இருக்காரு. அவர் கோவப்பட்டு நடிப்பை வாங்கினதாலதான் நடிகர்களுக்கும் தேசிய விருது கிடைச்சிருக்கு.
அவரோட படத்துல நடிக்க திரும்ப வாய்ப்பு வரவே இல்ல. அது என்னோட ராசி போலன்னு நினைச்சுக்கிட்டேன். இப்போ கேரளாவுல என்னோட கணவர், ரெண்டு மகள்களோடு இருக்கேன். முதல் மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறா. சின்னவ ஆறாவது படிக்கிறா.
பெரியவளுக்கு டான்ஸ், பாட்டுல இன்ட்ரஸ்ட் இருக்கு. என் படத்தைப் பார்த்துட்டு எப்படிப் பயந்த மாதிரி நடிச்சீங்கன்னு வியந்துபோய் கேட்பாளுங்க. எங்க வீட்டுக்காரர் ’சேது’ படத்தைப் பார்த்துட்டு, என்கிட்ட அவ்ளோ வாயாடுற, படத்துல பூனை மாதிரி நடிச்சிருக்கன்னு சொல்லி சிரிப்பார். அவர் எல்.இ.டி பல்பு பிசினஸ் பண்றார். நான் நடிக்கிறதுக்கு இப்பவும் என்ரேஜ்தான் பண்றாரு. நான்தான் சீரியலில் நடிக்கிறதில்ல. ஏன்னா நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் வர்றதில்ல.
முன்னாடி எல்லாம் சீரியல் இயக்குநர்களுக்கு சுதந்திரம் இருந்தது. இப்போ சேனல் நிர்வாகமே ஆட்களை நியமிக்கிறாங்க. முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களில் நடிச்சுட்டு போகமுடியாதில்லையா? எனக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி கதையும் கதாபாத்திரமும் அமைஞ்சா நடிப்பேன்.
இந்த நாள்ல பாலா சாருக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கிறேன். என்னோட பிரேயர்ல எப்பவுமே பாலா சார் பேரும் இருக்கும்” என்கிறார் புன்னகையோடு.